Saturday 30 June 2012

நிலா ரசிகன்

நிலா ரசிகன்
¤
கோவிலில் அர்ச்சனை
செய்ய அவள் பெயர் சொன்னேன்..
என்ன நட்சத்திரம்
என்று கேட்கும்
அர்ச்சகருக்கு
எப்படிப் புரியவைப்பேன்?
அவள் நிலா என்று!
¤
அமாவாசையன்று
உன் பக்கத்துவீட்டுக்
குழந்தை என்னிடம் கேட்டது
இன்னிக்கு நிலா எங்கே போயிருச்சு என..
அதற்கு எப்படித் தெரியும்?
நீ ஊருக்குப் போனது!
¤
சந்திரன் என்னும்
ஆண்பால்
நிலா என்று
பெண்பாலானது
உன்னால்!
¤
நிலா சூரியனைச்
சுற்றுகிறது என
தவறாகச் சொல்லியிருக்கிறது
விஞ்ஞானம்..
எனக்குத் தெரிந்து நீ யார் பின்னாலும்
சுற்றுவதில்லையே..
உன் பின்னால்தானே
எல்லோரும் சுற்றுகிறார்கள்!
¤
மனிதனால் நிலாவில்
கால்வைக்கத்தான்
முடிந்தது..
நாங்கள் குடியேறியேவிட்டோம்
என்கிறது உனது
ஸ்டிக்கர்பொட்டும்
லிப்ஸ்டிக்கும்!
¤
தயவுசெய்து நகம்
கடிக்கும்
நல்லபழக்கத்தை
விட்டுவிடாதே..
அப்புறம் உன் காலடியில் நான் சேகரிக்க உதிர்ந்து கிடக்காது எனக்கான
பிறைநிலாத் துண்டுகள்!
¤
சீக்கிரம் உன்வீட்டு
வாசலுக்கு வா..
எதிர்வீட்டுக்
குழந்தைக்கு
நிலாச்சோறு
ஊட்ட வேண்டுமாம்!
¤

கடைசி காதல் கடிதம்::

இதுவரை கடித வரிகளால் காதல் வரி கட்டிக் கொண்டிருந்த எனக்கு இந்த கடிதத்தோடு வரிவிலக்கு அளிக்கப் படுகிறது! உனக்குத் தெரியாது.. உனக்காய் வாங்கி வைத்த உதிரம் வழியும் சிவப்பு ரோஜாக்கள் எல்லாம் உவர்ப்பு ரோஜாவாய் மாறிய உண்மை! முன்பெல்லாம் கவியெழுதும் பேனா பூக்காம்பாய் மாறும்! இன்று ஏனோ தீக்கூம்பாய் எரிக்கிறது! தெரியாமல் உன் விரல் பட்டுவிடும் போதெல்லாம், தெரிந்தே மின்னல் கீற்றை தொட்டுப் பார்த்தவன், இன்று உனை விட்டுப் போக நினைக்கையில் எமனிடம் எனை விற்றுப்போக துணிகிறேன்! இத்துடன் உன் இதயம் நனைக்க என் கண்ணீர் துளிகளால் பன்னீர் துளிகளை அனுப்பியுள்ளேன்! நனைக்கவில்லை என்றால் சொல் செந்நீர் துளிகளை அனுப்புகிறேன்! இது எனது கடைசி கடிதமாய் இருப்பினும், நீ எழுதும் பதில் உனக்கு முதல் காதல் கடிதமாய் அமையட்டும்!
இப்படிக்கு,
உன் வாசிப்பில் வசிக்கும் நான்!

வேஷம்::

வரவேற்பறை
பூஜையறை
சமயலறை
படுக்கையறை
குளியலறை
என, என் வீட்டின் எல்லா அறைகளிலும் உன் வாசம் விட்டுப்போகும் நீ, உன் இதய அறையில் மட்டும் இன்னும் எதற்கடி உன் காதலை வேஷமிட்டு மறைக்கிறாய்??

ஆதலால் மழை ரசிப்பீர்::

எப்படி
வேண்டுமானாலும்
கவிதை எழுதலாம்
என்று சொல்லிப்
போகிறது
வெயிலோடு வரும்
மழை!
¤
ஒருகோப்பை
தேநீரோடு மழையை ரசிக்க
நீயிருக்கிறாய்
உன்னோடு மழையை ரசிக்க
நானிருக்கிறேன்
மழையோடு மழையை ரசிக்கத்தான்
யாருமில்லை!
¤
ஆலங்கட்டி பொறுக்கித் தின்னும்
குழந்தையை
நனைப்பதாய் நினைத்து
தன்னைத்தானே
நனைத்துக்கொள்கிறது
அந்திமழை!
¤
புயல்மழை காரணமாக இன்று
பள்ளி விடுமுறை..
இப்படித்தான்
முதன்முதலாய்
மழை ரசனை
ஆரம்பமாகிறது!
¤
ஒருகோப்பை தேநீரை
மணிக்கணக்கில்
சுவைப்பதற்கு
மழையை விட
சிறந்த காரணம்
ஏதுமில்லை!
¤
விடாமழையை
யாரும் விமர்சிக்க வேண்டாம்..
அது வீட்டினுள்
பத்திரமாய் அடைத்து
வைக்கப்பட்டிருக்கும்
குழந்தைகளை
நனைக்கும்
சந்தர்பத்திற்காக
காத்திருக்கிறது!

Friday 29 June 2012

குழந்தை::

நாத்திகன்
மனைவிக்கு
பிரசவம்
வீல் என்ற
சத்தத்துடன்
பிறக்கிறார்
கடவுள்!

காதல்ககாலம்::

இறந்த காலத்தை
நிகழ்காலத்திலும்
நிகழ்காலத்தை
எதிர்காலத்திலும்
சுமக்கச் செய்கிறது
காதல்!!

டைரி::

கோவிலுக்குச்
செல்லும் நல்ல
பழக்கத்தோடும்

ஏதாவதொரு
கெட்டபழக்கத்தை
விட்டுவிடும்
உறுதிமொழியோடும்
ஜனவரி 1 ல்
ஆரம்பித்து

கும்மாளமும்
குடியுமாய்
புத்தாண்டை
வரவேற்ற கதையோடு
டிசம்பர் 31 ல்
முடியும்
பெரும்பாலான
டைரிகளின்
குறிப்புகள்!

ஒவ்வொன்றின்
உள்ளேயும்
பிப்ரவரி 14 ஆம்
நாளில்
சொல்லப்பட்ட
காதலோ
கொல்லப்பட்ட
காதலோ

கட்டாயம்
புதைந்திருக்கும்!

நட்பு
பகை
ஏமாற்றம்
அவமானம்
சந்தோசம்
காதல்
பிரிவு
துரோகம்
குற்றம்
என

அடுக்கடுக்காய்
சொல்லப்
பட்டிருக்கும் அதன்
அடுத்தடுத்த
பக்கங்களில்!

அவ்வப்போது
தெரிந்தே செய்த
தவறுகள்
அப்பட்டமாய்
ஒப்புக்கொள்ளப்
பட்டிருக்கும்!

ஏதும் எழுதப்படாது
வெற்றுத்தாளாய்
கிடக்கும் ஓரிரு
நாட்கள்தான்
எழுதியவனின்
அமைதியான
தினங்கள்..

இவ்வாறாக
பன்முகங்களையும்
ஒளிவுமறைவின்றி

வெளிச்சமிட்டுக்
காட்டும்
டைரிகள்

இப்போது
பத்திரமாக
அவரவர் வீடுகளில்
ஒளித்து வைக்கப்
பட்டிருக்கிறது..

பரண் மேலும்
அஞ்சறைப்
பெட்டியின்
கீழும்..!

பூச்சாட்டுவிழா::

பூச்சாட்டு
விழாவின் போதுதான்
எங்கள்
புதுப்பாளையம்
கிராமம்
புதுப்பொழிவுடன்
காணக் கிடைக்கும்!

மூன்று வருடங்களாய்
சுண்ணாம்பு பூச்சுக்காணாத
வீட்டுச் சுவர்கள்

அன்று
வெள்ளைவெளிச்சத்தோடு
வீற்றிருக்கும்!

பகலெல்லாம்
மாரியம்மனையும்
மாகாளி அம்மனையும்
மாறிமாறி
பாடல்களால்
அழைத்துக்
கொண்டிருக்கும்
ஒலிப்பெருக்கிகள்

இரவு வந்ததும்
ஆட்டம் போடும்
ஆடவர்களை
அவரவர் பெயர்
சொல்லி
எங்கிருந்தாலும்
வரும்படி அழைக்கும்!

ஆறாம்நாளின்
இரவில்
பட்டுப்புடவையில்
புன்னகைத்தவாறு
அம்மன் ஜொலிக்க

கோவில் வளாகத்தினுள்
தாவணித் தேவதைகள்
உலா வர

அந்த முழு இரவும்
காளையரின்
கட்டுக்கடங்கா
நடனத்தோடும்

கன்னியரின்
கைதட்டும்
கும்மிப்பாட்டோடும்
விடியும்!

மறுநாள்
மஞ்சள்நீராட்டோடு
மகிழ்ச்சியாய்
முடியும் அந்த
ஏழுநாள் திருவிழா
இந்த வருடமும்
ஆரம்பமானது!

ஆட்டம்போடும்
ஆடவரெல்லாம்
அயல்தேசத்தில்
வேலையிலிருக்க

கலியுகக்
கன்னியரெல்லாம்
கல்லூரி விடுதியில்
கணிணி முன்
கிடக்க

ஏனைய மாந்தர்களும்
தொலைக்காட்சித்
தொடரில்
தொலைந்துபோயிருக்க

மங்கிய
வெளிச்சத்தில்
மாரியம்மனும்
மாகாளியம்மனும்
வாடிய முகத்தோடு
அருள்பாலித்தபடி
அமைதியாய்
பார்த்துக்
கொண்டிருக்கிறார்கள்

எவ்வித
பரபரப்புமில்லாமல்
ஒருவித
ஏமாற்றத்தோடு
முடியும் இந்த
பூச்சாட்டு விழாவை..!

அம்மா!!

ஈஸ்வரி என்கிற
நிர்மலாதேவியின்
பிரசவத்தில்

இந்த உலகிற்கு
இன்னுமொரு
சவமாய்
அவளுக்கு
இடப்பக்கம் நான்
கட்டிலில் கிடக்க

அவளோ
அதுதான்
தவம் என
பூரித்துப்
படுத்திருந்தாள்!

நடைபயின்ற
நேரம் கீழே
விழுந்த போதும்
சரி

காதல் தோல்வியால்
மனமுடைந்த போதும்
சரி

எனக்கு முன்பாகவே
அழுது எனது
அழுகையை
மறக்கச் செய்தாள்!

தேவதை
என்பதற்கும்
அழகி என்பதற்கும்
நான் அர்த்தம்
கற்றுக் கொண்டதும்

ஆன்மீகத்தொடு
பெண்மீகம்
போற்றும் கலை
கற்றுக் கொண்டதும்
அவளைப் பார்த்துதான்!

இன்று
கேள்விக் குறியாய்
வளைந்து வாழ்க்கையெனும்
அடைப்புக் குறிக்குள்ளே
நான்
அடைபட்டுக்கிடக்க

அவள் மட்டும்
இன்னும்
என் அகிலத்தில்
இருக்கிறாள்..

அசைக்கமுடியாத
ஆச்சர்யக்குறியாய்
அப்படியே!!!

வீடு::

அது ஒரு அழகான
வீடு!

நம் வீட்டு கான்கிரீட் கூடாரத்தைப்போல
அவ்வளவு கடினமானதில்லை
அந்த வீட்டின்
மண்ணாலான
கூடாரம்!

ஆனாலும் அதிகாலை மஞ்சள் சூரியனை
ஒளிபெயர்ப்பதும்
நடுநிசி
மழைத்துளிகளை
ஒலிபெயர்ப்பதும்
அதற்கு அவ்வளவு எளிது!

காக்கைகளுக்கும்
கிளிகளுக்கும்
மட்டுமே
வசப்பட்டுவந்த அந்த
முக்கோண மொட்டைமாடி
ஏதாவதொரு
காரணத்திற்காக
ஏறியிறங்கும்
எடைகுறைந்த
சிறுவர்களுக்கும்
சிலசமயம்
வசப்படும்!

முற்றத்து துளசியில்
கண்விழிக்கும்
கவிதா அக்காவும்
முன்வாசல் திண்ணையில்
கண்ணயரும்
முத்துசாமி
தாத்தாவும்
வடியும் மழைநீரை
வாளியில்
சேகரிக்கும்
கிருஷ்ணவேணி
அம்மாவும்
வாழ்ந்துவந்த
அந்த வீடு
எதுதெரியுமா?

செட்டியாரிடம்
பத்தாயிரம் ரூபாய்க்கு
விற்றுவந்த
எங்கள் கிராமத்து
ஓட்டுவீடுதான்!

ஆசை அறுபதுநாள்

வாரச்சந்தையொன்றில்
வாங்கிவந்த அந்த
ஆட்டுக்குட்டியால்தான்
என் மகள் பிருந்தாவின்
சந்தோசம்
அதிகரித்திருந்தது

அடிக்கடி தன்
பிஞ்சுவிரல்களால்
அதன் குத்தும்
ரோமங்களை
வருடியபடியே
சிரித்திருந்தாள்!

என் மனைவி
விரட்டவிரட்ட
மீண்டும் மீண்டும்
அதை
மல்லிக்கொடியில்
மேயவிடுவாள்!

இப்படியாய்
அவள்பின்னால்
அதுவும்
அதன்பின்னால்
அவளும்
சுற்றியபடியே
அறுபதுநாட்கள்
கழிந்திருக்க

ஒரு ஞாயிற்றுக்
கிழமை மதியம்
சங்கடமின்றி
நடந்துமுடிந்தது
நேர்த்திக்கடன்
சடங்கு!

மல்லி இலை தின்று வளர்ந்த
ஆட்டுக்குட்டி
இப்போது
வாழையிலையில்
கிடக்கிறது
கருப்பசாமிக்கு
படையலாய்!

மொட்டையடித்து
காது குத்திக்
கொண்டிருந்த போது
வலியால் அழுதபடியே
ஆட்டுக்குட்டி பற்றி விசாரித்தாள்
பிருந்தா!

இன்றும்
எனக்கு நன்றாய்
ஞாபகமிருக்கிறது

நான் கடைசியாய்
கோவிலுக்குப்
போனது
அன்றுதான்..

Thursday 28 June 2012

ஞாபகம்::

பிள்ளைகளுக்கு வித்தை காட்ட
உள்ளங்கையில்
பம்பரம் ஏந்துகையில்
பம்பரத்து ஆணி
செய்யும்
குறுகுறுப்பில்
சுழல்கிறது
அப்பாக்களின்
பால்யகாலம்.

ரசனை::

வெற்றியை மட்டுமே
ரசித்துக் கொண்டிருக்கிறாயா?
காதலித்துப்பார்..
தோல்வியையும்
ரசிக்க ஆரம்பித்து
விடுவாய்!

ஓய்வு::

பிரம்மனுக்கு
கட்டாய ஓய்வு
நீ பிறந்தவுடன்!!

வித்யாசம்

இனிமேல் நீ
வண்ணத்துப் பூச்சிகளின் பின்னால் ஓடிவிளையாடாதே!
அதற்கும் உனக்கும் வித்தியாசமே தெரிவதில்லை..
நான் உன்னைக்
கண்டுபிடிப்பதற்குள்
போதும் போதுமென்றாகி விடுகிறது!

நிலா::

அமாவாசையன்று
குழந்தை கேட்டது:
இன்று நிலா எங்கே போயிருச்சு என..
அதற்கு எப்படித் தெரியும்
நீ ஊருக்குப் போனது?!

வேடதாரி::

வள்ளல்
பக்திமான்
புத்திசாலி என
தினமொரு
வேடம்தரிக்கும்
மனித வேடதாரியான
எனக்கு
கடைசிவரை
பொருந்துவதுமில்லை
பிடிபடுவதுமில்லை
இயல்பு மாறாத
குழந்தை வேடம்!

Wednesday 27 June 2012

நினைவு::

நண்பன்
பகைவன்
வழிப்போக்கன்
பைத்தியக்காரன்
என எப்படி
வேண்டுமானாலும்
என்னை நினைத்துக் கொள்!
எனக்கு வேண்டியதெல்லாம்
என்னை நீ
நினைக்க வேண்டும்
அவ்வளவுதான்!

உரிமை::

உனது தந்தையோ
தாயோ உன்னிடம்
அன்புபாராட்டி
கொஞ்சும்
போதெல்லாம்,
என் தங்கம்
என் உரிமை என
கத்திவிடத்
தோன்றுகிறது
எனக்கு!

Tuesday 26 June 2012

நான் யார்?

உயர்திருநங்கைகளை
அலி என்கிறேன்..
அப்படியெனில்
மிடுக்காய் வளர்ந்த மீசையை மழித்துவிட்டு,
கலக்கல் ஃபேஷன் என காதில் ஒற்றைக் கடுக்கிட்டு,
கடிகார மணிக்கட்டில் செம்புக் காப்பு போட்டு,
நவநாகரிக ஆணாய் வலம்வரும்
எனக்கென்ன பெயர்??

மழை...

தடை போட
யாருமில்லாத
சமயங்களில்
சிந்தும்
தூறல்களே
மழை என்ற
தகுதியைப்
பெறுகின்றன
நனைந்து விளையாடும்
குழந்தைகளிடம்!

மழைக்காலம்::

¤
வானம்
பொத்துக்கொண்டு
பொழிகிறது..
பங்களாவில்
வசிப்பவனுக்கு
மழையாகவும்
குடிசைக்குள்
கிடப்பவனுக்கு
பிழையாகவும்!
¤
சாலையில்
நடந்துபோகையில்
சாரல் மழை!
குடை எடுத்து
வந்திருக்கலாமோ
என்ற சலிப்பில்
நான் வேகமாய் நடக்க,
நல்லவேளை
குடையெடுத்து
வரவில்லை என்ற சந்தோசத்தில்
மெதுவாய்
பின்தொடர்கிறான்
மகன்!
¤
நேற்றொரு
கனாக்கண்டேன்
நடுக்கடலில்
கப்பலில் நின்றபடி
மழையை ரசிப்பதாய்!
துயில் கலைந்து
விழித்துப் பார்த்தேன்..
கூரைக் கூடாரத்தினுள்
ஒழுகும் மழையில்
ஓடும் காகிதக்
கப்பலை ரசித்துக்
கொண்டிருக்கிறான்
மகன்!
¤
மழை வரப்போகும் நேரத்தில்
அம்மாவிற்கு
உதவி செய்கிறேன்
என்ற சாக்கில்
காய்ந்து கொண்டிருக்கும்
மிளகாய் வத்தல்களை மெதுவாய் அள்ளுகிறது குழந்தை!
அதிவேகமாய்
தரையிறங்கிக்
கொண்டிருக்கிறது
மழை!
¤

Monday 25 June 2012

கல்வி::

கடந்தகாலக் கல்வி
தரும்
நிகழ்காலச் சம்பளம்
சேமிப்பாகிறது
எதிர்காலக் குழந்தையின்
எல்.கே.ஜி
படிப்பிற்கு!

பால்...

அன்று
பெண் குழந்தைகளுக்கு
கள்ளிப்பால்
ஊற்றினார்கள்...
இன்று
உனைப் போன்ற
தேவதைகளுக்கு
கவிதைப்பால்
இயற்றிக்
கொண்டிருக்கிறார்கள்!!

பால்::

தேவதை என்பது
ஆண்பாலா?
பெண்பாலா?
தெரியாது...
இப்போதைக்கு
நீ!
அவ்வளவுதான்!!

Saturday 23 June 2012

உறுதிமொழி:::

புகைத்து
முடிக்கும்
சிகரெட்டோடு
சேர்த்து
நசுக்கப்படுகிறது
இனிமேல்
புகைபிடிக்கக்
கூடாதென்ற
உறுதிமொழியும்!

தேவதை::

வருடம் ஒரு
தேவதையை
உருவாக்கி விடுகிறது
வகுப்பறையில்
நீ அமர்ந்த முதல் பென்ஞ்ச்!

உறக்கம்::

எனது ஒவ்வொரு
பயணத்தின் போதும்
தயார்படுத்திக் கொண்டுதான்
வருகிறேன் எனது
தோள்களை..
ஆனால் உனக்குத்தான்
உறக்கமே
வருவதில்லை!

மணம்..

பூவோடு சேர்ந்தால்
நாரும் மணக்கும்..
அது சரி,
உன்னோடு
சேர்ந்ததால் தானே
அந்தப் பூவே
மணக்கிறது!!

இயல்பு::

இயல்பாய் இருக்க
இயலவில்லை..
இயல்பாய் இருக்கும்
உன் அழகை
காணும் போது!

அறிவாளி:::

ஆம்ஸ்ட்ராங் ஒன்றும் அவ்வளவு
சிறந்த அறிவாளி
இல்லை..
நிலாவைத் தொட
வானத்திற்கு செல்ல வேண்டுமா?
உன் வீட்டு
வாசலுக்கு வந்திருந்தால்
போதுமே!

அம்மா:::

நான் எழுதிய உறவு பற்றிய
கவிதையொன்று
ஒரு வாரஇதழில்
வெளியாகியிருந்த
சமயம் அது..

நல்லாயிருக்கு என
சுருங்கச் சொன்னார் தந்தை!

பரவாயில்லை என
பட்டும்படாமல் பாராட்டினாள் தங்கை!

வழக்கம்போல் கேலியும் கிண்டலுமாய்
புகழ்ந்தான் நண்பன்!

ஒரு முத்தத்தோடும்
சில சிணுங்கல்களோடும்
ரசித்தாள் காதலி!

ஊரெல்லாம்
பெருமையாய்
சொல்லிக் கொண்டிருந்தாள்
அம்மா!!

எட்டு::

உலக அதிசயம்
இசையின் ஸ்வரம்
வானவில் வண்ணம்
மனிதப்பிறவி
என அனைத்தையும்
ஏழாய் அறிவித்தவன்,
ஒரு எட்டு உன் வீடுவரை வந்திருந்தால்
அனைத்தும் எட்டாய் போயிருக்கும்!

அனுமதி::

வழக்கம் போல இந்தக்
காதலர்தினத்தன்றும்
நான் உனக்கு எனது தோட்டத்து
ரோஜாக்களை
பரிசளிக்கப் போவதில்லை...
ஏனென்றால்,
காதல் சொல்லப்படும் போது
ஒரு ரோஜா கொல்லப்படுவதை
ஒருபோதும் அனுமதிக்காது
என் காதல்!!

மை...

எல்லோரும் கண்ணுக்கு
மை தீட்டினால்
நீ இமைகளுக்கும்
சேர்த்து பூசிக் கொள்கிறாய்..
இனி நீ கண்ணிமைக்கும்
இடைவெளியில் கூட தப்பிக்க முடியாது போ!

Friday 22 June 2012

அழிவு::

வானம் பொழிகிறது..
பூமி விளைகிறது.. அடுக்குமாடிகள்
அழிக்கிறது!

மொழி:

நீ உறக்கத்தில்
உளறிக் கொண்டிருப்பதை
புரியாமல் பார்க்கிறாள் உன் அன்னை..
பாவம்!
அவளுக்கு எப்படித் தெரியும்
பூக்களின் மொழி..

காதல்::

துக்கம் மறக்க
தூக்கம் தந்த இறைவன்
தூக்கம் மறக்க கொடுத்தான்
காதலை..!

மறதி...

உன்னை மறக்க
நினைக்கிறேன்..
அதன்பின் மறந்தே
போகிறேன்
உன்னை மறக்க நினைத்ததை!!!

ரசனை::

நீ கொட்டும் மழையை ரசித்துக்
கொண்டிருக்கிறாய்..
நான் உன்னை ரசித்துக் கொண்டிருக்கிறேன்..
நம்மை ரசித்துக்
கொண்டிருக்கிறது
காதல்!!

பேச்சு...

உன்னுடன் நான்
பேசிக் கொண்டிருக்கையில்
உன் அசைவுகளைக் கண்டு
அமைதியாய் என்னுள் பேசிக்
கொண்டிருக்கிறது
இன்னும் எழுதப்படாத எனது கவிதைகள்!

விழாக்காலம்:::

கல்லூரி விடுமுறைக் காலத்தில் சாதாரணமாய் உலாவரும் பேருந்து,
நீ கல்லூரி செல்லும் நாட்களில் மட்டும் மாறிப்போகிறது
விழாக்காலப் பேருந்தாக..!

பெரிது::

பெரிதினும் பெரிது கேள் என கல்லூரியில் தமிழ் வகுப்பு நடந்து கொண்டிருக்க,
நான் எழுந்து சத்தமாய் கேட்டுத் தொலைத்தேன்
உன்னை...

களங்கம்::

நிலாவில் கூட களங்கங்களா?
உனது முகப்பரு!!

கவிஞர்கள்::

நமது தொலைபேசி உரையாடலை ஒட்டுக் கேட்பவர்கள் கூட
இறுதியில் கவிஞர்களாய்த்தான்
மாறிப்போவார்கள்!

வெட்கம்::

இரவு முழுதும் உன்னுடன் வைத்திருந்து விடிந்ததும் விலக்கிவிட்டாய்..
பரவாயில்லை..
என்னை நீ நினைத்திருக்க எனது வெட்கத்தை மட்டும் உன் விரலில் விட்டுப்போகிறேன்!
இப்படிக்கு,
மருதாணி!

Thursday 21 June 2012

ஆசை::

¤
ஆசையை
துறக்கச் சொன்ன
புத்தனை
அறிந்துகொள்வதில்
அனைவருக்கும்
அவ்வளவு
ஆசை!!
¤

பால்...

சந்திரன் என்ற
ஆண்பால்
நிலா என்று
பெண்பாலானது
உன்னால்...!

கடன்::

மகள் பிருந்தாவிற்கு
மொட்டையடித்து
காதுகுத்தி
எப்படியோ ஒருவழியாய்
குலதெய்வத்திற்கு
நேர்த்திக்கடன்
செலுத்திவிட்டேன்..
கந்துவட்டிக்கு
கடன் வாங்கி!!

கவிதை::

உன்னைப் பற்றி
எழுதும்போது
மட்டும் கவிதை
கவிதையாகவே இருக்கிறது!