Sunday, 30 June 2013

மகளாகிய தேவதை 25

மகளாகிய தேவதை  25
ழகரத்தை

மிகச் சரியாய்

உச்சரிக்கும் தமிழாசிரியை..


உதட்டில்

உமிழ்நீரொழுக

ஆடியாடி நடக்கும்

பிரபஞ்ச அழகி..


டூ விட்ட அடுத்த

நொடியே பழம் விட்டு

பழயன மறக்கும்

பாசக்காரி..


மணிக்கொரு முறை

எட்டிப்பார்க்கும்

கடிகாரக் குருவிக்கு

கதை சொல்லும்

கவிதைக்காரி..


பூமியில் பறக்கும்

சிறகில்லா தேவதை..


பெண்மைக்கு

புகழ் சேர்க்கும்

மீசையில்லா பாரதி..


இப்படியும்

அப்படியும்

எப்படியும் இருக்கலாம்..


மகள் மகளாய்த்தான்

இருக்கவேண்டுமென்று

எந்த அவசியமும் இல்லை!!


Published with Blogger-droid v2.0.4

Saturday, 29 June 2013

மகளாகிய தேவதை 24

மகளாகிய தேவதை  24
பிறந்த வீட்டிலிருந்து

புகுந்தவீட்டிற்கு

போகையில்

இருண்ட வீடாகிறது

மகள்

இருந்த வீடு!


Published with Blogger-droid v2.0.4

மகளாகிய தேவதை 23

மகளாகிய தேவதை  23
முதலும் கடைசியுமாய்

கடலிடம்

பிரார்த்திக்கிறேன்..

மகள் கட்டிய

மணல்வீட்டை

அவள் விளையாடி

முடிக்கும்வரையிலாவது

அலையிடமிருந்து

காப்பற்றக்கோரி!!


Published with Blogger-droid v2.0.4

Friday, 28 June 2013

மகளாகிய தேவதை 22

மகளாகிய தேவதை  22
தேவதை என்றெல்லாம்

ஒன்று இல்லவே இல்லை..

மகள் வேண்டுமானால்

இருக்கிறாள்!!


Published with Blogger-droid v2.0.4

Thursday, 27 June 2013

மகளாகிய தேவதை 21

மகளாகிய தேவதை  21
மகள்!

இதைவிட சிறந்த

பெயரொன்றை

யாராலும்

சூட்டமுடியாது

தேவதைக்கு!!


Published with Blogger-droid v2.0.4

Wednesday, 26 June 2013

மகளாகிய தேவதை 20

மகளாகிய தேவதை  20
கேட்டுப் பெறுதலும்

இன்பமே..

'மகள் முத்தம்'


Published with Blogger-droid v2.0.4

மகளாகிய தேவதை 19

மகளாகிய தேவதை  19
அழகானதோர்

ஓட்டுவீடு..

அதைச் சுற்றி

நீண்டிருக்கும்

புல்வெளி..

வீட்டின் முன்னால்

ஒரு சிறு நதி..

நதியில் இரு

வாத்துக் குஞ்சுகள்..

ஆங்காங்கே சில

தாமரைப்பூக்கள்..

கரையோரம் சில

தென்னை மரங்கள்..

வானில் பறக்கும்

ஒற்றைப் பறவை..


படம் வரைகிறேன்

என்று சொல்லி

இன்றைக்கும்

ஒரு கவிதையைத்தான்

எழுதித் தந்திருக்கிறாள்

மகள்!


Published with Blogger-droid v2.0.4

Tuesday, 25 June 2013

மகளாகிய தேவதை 18

மகளாகிய தேவதை  18
பறக்கும் முத்தமிட்டபடி

டாட்டா சொல்லும்

மகளின் கையசைப்பிற்காக

எத்தனை முறை

வேண்டுமானாலும்

வீட்டிலிருந்து விடை பெறலாம்..


வந்ததும் வராததுமாய்

எடுத்துக் கொள்ளச் சொல்லும்

மகளின் கைதூக்கலுக்காக

எப்போதும்

வீட்டிலேயே

இருந்தும்விடலாம்!


Published with Blogger-droid v2.0.4

மகளாகிய தேவதை 17

மகளாகிய தேவதை  17
புருவம் தூக்கி

விழியுருட்டி

நாக்கு நீட்டி

மிரட்டும் மகளைக் கண்டு

பயப்படுவதாய்

நடிக்கக்

கண்மூடுகையில்

கடந்துவிடுகின்றது

கணநேரக்

கவிதையொன்று!


Published with Blogger-droid v2.0.4

Monday, 24 June 2013

மகளாகிய தேவதை 16

மகளாகிய தேவதை  16
குழந்தையாய்

மாறாதவரை

எவருக்கும்

இடமில்லை

மகள் ஓட்டும் ரயிலில்!


Published with Blogger-droid v2.0.4

Sunday, 23 June 2013

மகளாகிய தேவதை 15

மகளாகிய தேவதை  15
எங்கோ ஒரு மகள்

சிறுமியாகிறாள்


எங்கோ ஒரு மகள்

கன்னியாகிறாள்


எங்கோ ஒரு மகள்

மணமகளாகிறாள்


பிரிதலற்ற உலகம்

வேண்டி

எங்கோ ஒரு தகப்பன்

அந்திமப்பொழுதில்

அழுது கொண்டிருக்கலாம்!


Published with Blogger-droid v2.0.4

Saturday, 22 June 2013

மகளாகிய தேவதை 14

மகளாகிய தேவதை  14
எனக்காக

மகளையும்

மகளுக்காக

என்னையும்

மீட்டுத்தரும்

ஞாயிற்றுக்கிழமை

ஒன்று போதும்..

முந்தைய கிழமைகளில்

விரும்பி

சிறைபட்டுக்கொள்ள!


Published with Blogger-droid v2.0.4

Friday, 21 June 2013

மகளாகிய தேவதை 13

மகளாகிய தேவதை  13
மூளை கசக்கிப்

பிழிந்தெடுத்த சொல்லோ

மனதின் ஆழத்திலிருந்து

பிடுங்கப்பட்ட சொல்லோ

ஒப்பீட்டுச் சாயம் பூசிய

வர்ணணைச் சொல்லோ

தேவையின்றி

வெகு இயல்பான

சொற்களே

போதுமானதாயிருக்கிறது

மகளின் குறும்புகளை

குறிப்பிட்டுச் சொல்ல..


என்ன செய்ய?

குழந்தைகளின்

இயல்பு அப்படி!


Published with Blogger-droid v2.0.4

Thursday, 20 June 2013

மகளாகிய தேவதை 12

மகளாகிய தேவதை  12
ஒண்ணு..

மூணு...

பத்து...

என்றவாறு மகள் விண்மீன்களை

விரல்விட்டு

எண்ணுகின்ற

அழகிற்காகவே

நிலாவை

திருஷ்டிப் பொட்டாக்கலாம்!


Published with Blogger-droid v2.0.4

Wednesday, 19 June 2013

மகளாகிய தேவதை 11

மகளாகிய தேவதை  11
வெள்ளையடித்த

சுவர்களில்

கொள்ளையடிக்கும்

பென்சில் தீற்றல்கள்


அடுக்கி வைத்ததை

கலைத்து வைத்திருக்கும்

கலைநயம்மிக்க

மேஜைகள்


திறந்த புத்தகங்களுடன்

மூடியிருக்கும்

அலமாரிகள்


அங்குமிங்குமாய்

கழற்றிப் போட்டிருக்கும்

அழுக்கில்லா ஆடைகள்


தண்ணீர் சிந்திய

வழுக்கும் வாசற்படிகள்


கோலத்தின்மேல்

கோலம்போட

அரைகுறையாய்

பிய்த்துப்போட்டிருக்கும்

அரளிப்பூக்கள்


என

அழகியல் விதிப்படியேதான்

திகழ்கின்றது..


மகளும்

மகள்சார்ந்த வீடும்!


Published with Blogger-droid v2.0.4

Tuesday, 18 June 2013

மகளாகிய தேவதை 10

மகளாகிய தேவதை  10
மகள் இருபதைக்

கடந்து

கொண்டிருக்கிறாள்..

பூஜ்யமாகிக்

கொண்டிருக்கிறது

தகப்பனின் உலகம்!


Published with Blogger-droid v2.0.4

மகளாகிய தேவதை 9

மகளாகிய தேவதை  9
அப்பாக்கள்

அன்பிற்குரியவர்கள்

மகள்கள்

அன்பிற்கே

உரியவர்கள்!


Published with Blogger-droid v2.0.4

மகளாகிய தேவதை 8

மகளாகிய தேவதை  8
குளிப்பாட்டி

தலைசீவி

பொட்டுவைத்து

ஒற்றை நொடியில்

பொம்மைக்குத்

தாயாகிவிடுகிறாள்

மகள்!


Published with Blogger-droid v2.0.4

Monday, 17 June 2013

மகளாகிய தேவதை 7

மகளாகிய தேவதை  7
அநேகமாய்

பூமித்தாயின்

உச்சி குளிர்ந்திருக்கலாம்


பறந்து பறந்து

பட்டாம்பூச்சிகளின்

சிறகு வலித்திருக்கலாம்


திறந்திருக்கும்

முன்வாசல் கதவுகள்

நடைசாத்தப்பட்டு


எறிந்து கிடந்த

வீட்டுப் பொருட்கள்

எட்டா இடத்தில்

பத்திரமாகியிருக்கலாம்


என்ன செய்வது

ஒரு பூ மலர்வதை

இவ்வளவு இயல்பாய்

விளக்கிச் சொல்ல

முடியாதுதான்..


"மகள் நடக்கப் பழகிவிட்டாள்"


Published with Blogger-droid v2.0.4

Sunday, 16 June 2013

மகளாகிய தேவதை 6

மகளாகிய தேவதை  6
மகள்

தந்தைக்காற்றிய உதவி

மகளாய் பிறந்ததுவே!


Published with Blogger-droid v2.0.4

மகளாகிய தேவதை 5

★ ★


கடவுளுக்கு

பிடித்தமான உணவு


நீரின்றி நெருப்பின்றி

சமைத்த உணவு


இது அம்மாவுக்கு

இது அப்பாவுக்கு

இது தம்பிக்கு

என

பாசத்தைப்

பங்கிட்டு

படையலிடும் உணவு


அன்பும் அறியாமையும்

அழகாய் கலந்த உணவு


போவோர் வருவோர்க்கெல்லாம்

பஞ்சமின்றி பரிமாறும் உணவு

என,


மகள்கள் சமைக்கும்

அந்த மண்சோற்றில்தான்

எவ்வளவு எளிதாய்

ஜீரணமாகிவிடுகிறது

அப்பாக்களின்

அத்தனை பசிகளும்!


★ ★ ★


Published with Blogger-droid v2.0.4

மகளாகிய தேவதை 5

மகளாகிய தேவதை  5
தன்னோடிருக்கும்

மகளை

தன்வசமாக்கி

தனிமைப்படுத்தும்

பொம்மைகளற்ற

உலகத்தையே

பெரும்பாலான

அப்பாக்கள்

விரும்புகிறார்கள்!


Published with Blogger-droid v2.0.4

Saturday, 15 June 2013

மகளாகிய தேவதை 4

மகளாகிய தேவதை  4
மகள்

உப்புமூட்டை

ஏறும்போதெல்லாம்

மனம்

சர்க்கரை மூட்டையாகிவிடுகிறது!


Published with Blogger-droid v2.0.4

மகளாகிய தேவதை 3

மகளாகிய தேவதை 3பள்ளிக்கூட வாசலில்

மகளுக்காக நின்றிருக்கும்

அப்பாக்களுக்கு

காத்திருத்தல் என்பது

போற்றுதலுக்குரியதாகிறது!Published with Blogger-droid v2.0.4

Friday, 14 June 2013

மகளாகிய தேவதை 2

மகளாகிய தேவதை  2நாங்கெல்லாம்

நேத்து

ஊருக்கு போவோம்

என எவ்வளவு

இயல்பாய்

இறந்தகாலத்தை

உயிர்ப்பித்து

விடுகிறாள்

மகளாகிய தேவதை!Published with Blogger-droid v2.0.4

மகளாகிய தேவதை 1

மகளாகிய தேவதை 1

எல்லா அப்பாக்களும்

மகள்களை தேவதையோடு

ஒப்பிடுகிறார்கள்..

உண்மையில்

மகள் என்றாலே

ஒப்பீடற்ற

தேவதைதான்!
Published with Blogger-droid v2.0.4