Monday 29 July 2013

மகளாதிக்கம் 13

மகளாதிக்கம்....13 



அம்மா சொல்லும்

எல்லாக் கதைகளிலும்

ஏதாவதொரு தேவதை

இருக்கிறாள்..

அம்மாவுக்கு ஒரு மகள்

இருந்திருந்தால்

எந்தக் கதையிலும்

தேவதை

இருந்திருக்கமாட்டாள்!



Published with Blogger-droid v2.0.4

Tuesday 23 July 2013

மகளாதிக்கம் 12

மகளாதிக்கம்....12 



வைத்தது வைத்த இடத்தில்

இருப்பதில்லை..

எடுத்ததை எடுத்த இடத்தில்

வைப்பதில்லை

என்னும் அழகியல் கோட்பாட்டோடு

இருக்கிறது

மகளாதிக்கம் நிரம்பிய வீடு!



Published with Blogger-droid v2.0.4

Saturday 20 July 2013

மகளாதிக்கம் 11

மகளாதிக்கம்....11 



மௌனத்தாலும்

புன்னகையாலும்

வாழும் கலையை

உணர்த்திக் கொண்டே

இருப்பதற்காவது

மகள் இன்னும்

கொஞ்ச காலம்

சிறுமியாகவே இருக்கலாம்!!



Published with Blogger-droid v2.0.4

Wednesday 17 July 2013

மகளாதிக்கம் 10

மகளாதிக்கம்....10 



கண்திறந்த

சிலையின் முன்னால்

கண்மூடி கைகூப்பி

நிற்கிறாள் மகள்..

தவமின்றி

கடவுளுக்குக் கிடைத்தது

தேவதை தரிசனம்!



Published with Blogger-droid v2.0.4

மகளாதிக்கம் 9

மகளாதிக்கம்....9 



மகள் இருக்கின்ற

நம்பிக்கையில்தான்

எந்த அப்பாவும்

தேவதையை

நம்புவதில்லை!!



Published with Blogger-droid v2.0.4

Tuesday 16 July 2013

மகளாதிக்கம் 8

மகளாதிக்கம்....8 



புத்தகத்தின் நடுவே

வைத்திருக்கும்

மயிலிறகை

மகளுக்குத் தெரியாமல்

சிறிது சிறிதாய்க் கிள்ளி

குட்டி போடவைக்கையில்

தொடங்குகிறது

மகளின்  எதிர்பார்ப்புகளை

பூர்த்தியாக்கும்

அப்பாக்களின்

வாழ்க்கைப்பயணம்!



Published with Blogger-droid v2.0.4

மகளாதிக்கம் 7

மகளாதிக்கம்....7 



நல்லவேளை

மகள் பிறந்தாள்..

இல்லையென்றால்

தேவதைக்கு தந்தையாகும்

வாய்ப்பு எனக்கு

கிடைக்காமலே போயிருக்கும்!



Published with Blogger-droid v2.0.4

Monday 15 July 2013

மகளாதிக்கம் 6

மகளாதிக்கம்....6 



மகள்களைப் பெற்ற

அப்பாக்களைப் போலவே

அக்காவையோ

தங்கையையோ

சகோதரியாய் பெற்ற

மகன்களும்

பாக்கியவான்களே!



Published with Blogger-droid v2.0.4

Sunday 14 July 2013

மகளாதிக்கம் 5

மகளாதிக்கம்....5 



வள்ளுவனுக்கும்

வாசுகிக்கும்

மகள் பிறந்திருந்தால்

ஐந்தாம் அதிகாரமாய்

தமிழுக்கு

கிடைத்திருக்கும்

மகளதிகாரம்!!



Published with Blogger-droid v2.0.4

மகளாதிக்கம் 4

மகளாதிக்கம்....4 



கண்ணாமூச்சியாட்டத்தில்

அம்மாவின் முந்தானையில்

மறைந்திருக்கும் மகளை

கண்டுபிடித்தல் சுலபம்..

மகளைப்போல்

கணநேரத்தில்

தொலைதல்தான்

மிகக் கடினம்!



Published with Blogger-droid v2.0.4

Saturday 13 July 2013

மகளாதிக்கம் 3

மகளாதிக்கம்....3 



மழையை

ரசிப்பதற்கும்

மழையில்

நனைவதற்கும்

இடையிலான

நிகழ்வில் இருக்கிறது

எனக்கும்

மகளுக்குமான

வித்தியாசம்!



Published with Blogger-droid v2.0.4

Friday 12 July 2013

மகளாதிக்கம் 2

மகளாதிக்கம்....2 



விரட்ட விரட்ட

வந்தமர்ந்து

உணவு தேடிய

களைப்பையெல்லாம்

மகளோடு விளையாடித்

தீர்த்துவிட்டுப்

பறக்கிறது

முற்றத்துக் காக்கையொன்று!



Published with Blogger-droid v2.0.4

Thursday 11 July 2013

மகளாதிக்கம் 1

மகளாதிக்கம்....1 



ஈன்றெடுத்து

உலகில் உலவச் செய்தவள்

யாரோ ஒருவரின் மகள்


பொட்டல் காட்டில்

நொண்டியும்

பல்லாங்குழியும் ஆடக்

கற்றுத்தந்தவள்

யாரோ ஒருவரின் மகள்


மூன்றாம் வகுப்பில்

வாய்ப்பாட்டை

தப்பாய் ஒப்பித்து

ஐந்தாம் வகுப்பில்

அத்தனை பாடத்திலும்

முதலாய் வந்தவள்

யாரோ ஒருவரின் மகள்


காதலிக்க தூது சென்றதும்

காதலித்து கவிதை தந்ததும்

யாரோ ஒருவரின் மகள்


கட்டியணைத்து

கணவனாக்கியதும்

கடைசிவரை கூட நிற்பதும்

யாரோ ஒருவரின் மகள்


இவ்வளவையும்

மீண்டும் மறுசுழற்சி செய்ய

என்னையும்

யாரோ ஒருவராக்க

என் வீட்டில்

பிறப்பெடுக்கிறாள்

ஒரு மகள்!



Published with Blogger-droid v2.0.4

Wednesday 10 July 2013

காதல் அந்தாதி 15

காதல் அந்தாதி....15



காதலை

கடனாய் தந்து

கவிதைகளை

வட்டியாய் வசூலிக்கும்

கவிதைக்காரி

நீ!



Published with Blogger-droid v2.0.4

Tuesday 9 July 2013

காதல் அந்தாதி 14

காதல் அந்தாதி...14



உனக்குத் தெரியாமல்

நானும்

எனக்குத் தெரியாமல்

நீயும்

காலிக்கோப்பையில்

மிச்சமிருக்கும்

எச்சில் தேநீரை

ருசிக்கிறோம்..

புனிதமடைகிறது

காதல்!



Published with Blogger-droid v2.0.4

Monday 8 July 2013

காதல் அந்தாதி 13

காதல் அந்தாதி....13



என்னை

சீரழித்து

சீராக்கியது அது


சரியா தவறா என

பகுத்தறியும் அறிவை

மழுக்கி

போதையூட்டியது அது


உறக்கத்தை முழுதுமாய்

உறிஞ்சிக்கொண்டு

கவிஞனென்று

கிறுக்கனாக்கியது அது


ரோஜாக்களை தினம் தினம்

கொலை செய்யத்

தூண்டியதும் அதுவே


நான் சொல்வதெல்லாம்

காதல்..

காதலைத் தவிர

வேறொன்றுமில்லை!



Published with Blogger-droid v2.0.4

காதல் அந்தாதி 12

காதல் அந்தாதி....12



நீரின்றி

மட்டுமல்ல

காதலின்றியும்

அமையாது உலகு!



Published with Blogger-droid v2.0.4

காதல் அந்தாதி 11

காதல் அந்தாதி....11



சொர்க்கம்

இருக்கிறதா இல்லையா

தெரியாது..

காதலிருக்கிறது

அது போதும்!



Published with Blogger-droid v2.0.4

Sunday 7 July 2013

காதல் அந்தாதி 10

காதல் அந்தாதி....10



கள்ளிச் செடியில்

அவர்களின் பெயர்கள்


பேருந்து இருக்கைகளின்

பின்புறத்தில்

அவர்களின் பெயர்கள்


கோவில் சுவற்றின்

கற்பூரக் கரியில்

அவர்களின் பெயர்கள்


தேவாலய மேஜைகளில்

அவர்களின் பெயர்கள்


குட்டிச்சுவர்கள்

கழிப்பிடக் கதவுகள்

என கண்ட இடத்திலெல்லாம்

கண்டபடி

அவர்களின் பெயர்கள்


இப்போதும் சொல்கிறேன்..


எப்படிப் பார்த்தாலும்

காதல் அழகானதே!



Published with Blogger-droid v2.0.4

Saturday 6 July 2013

காதல் அந்தாதி 9

காதல் அந்தாதி....9



அறிவியல் பாடத்தில்

சந்தேகம் கேட்பதாய்

உன்னிடம் பேசிப் பேசியே

அழகியலின் சந்தேகம்

தீர்த்துக் கொள்கிறேன்!



Published with Blogger-droid v2.0.4

காதல் அந்தாதி 8

காதல் அந்தாதி....8



அநேகமாய்

எல்லோரும்

எழுதிப்பழகிய

பொய் கலவாத

முதல் கவிதை

இதாய்த்தான் இருக்கும்..

"ஐ லவ் யூ"



Published with Blogger-droid v2.0.4

காதல் அந்தாதி 7

காதல் அந்தாதி....7



தேவதைகள்

பிறப்பதில்லை

காதலால்

உருவாக்கப்படுகிறார்கள்!



Published with Blogger-droid v2.0.4

Friday 5 July 2013

காதல் அந்தாதி 6

காதல் அந்தாதி....6



உனக்கான

ஹைக்கூ கவிதைகளில்

நிரம்பி வழிகிறது

என் ஹைடெக் காதல்!



Published with Blogger-droid v2.0.4

காதல் அந்தாதி 5

காதல் அந்தாதி....5



எவருக்கும்

எதற்கும்

பிரயோஜனமில்லை

நீயில்லாத நானும்

காதலில்லாத உலகும்!



Published with Blogger-droid v2.0.4

Thursday 4 July 2013

காதல் அந்தாதி 4

காதல் அந்தாதி....4



குளத்து நீரள்ளி

நீ முகம்

கழுவுகிறாய்


குளமெங்கிலும்

எழுகின்ற

நீர்வளையங்களில்

தேவதை பிம்பங்கள்!



Published with Blogger-droid v2.0.4

Wednesday 3 July 2013

காதல் அந்தாதி 3

காதல் அந்தாதி....3



உன்னோடிருக்கையில்

உனது சொற்களையும்

தனித்திருக்கையில்

எனது மௌனங்களையும்

தின்று வளர்கிறது

காதல்!



Published with Blogger-droid v2.0.4

Tuesday 2 July 2013

காதல் அந்தாதி 2

காதல் அந்தாதி....2




எடுத்துக்கொள்ளச்

சொல்லி

கைதூக்கி அழும்

குழந்தையைப் போலவே

உன்னிடம்

என் காதல்!


Published with Blogger-droid v2.0.4

Monday 1 July 2013

காதல் அந்தாதி 1

காதல் அந்தாதி... 1




கொஞ்சுவதற்கும்

திட்டுவதற்கும்

அருகிலேயே

நிலா


கதை சொல்லி

தூக்கம் கலைக்க

ஒரு தேவதை


குளிர் காய்ந்து கொள்ள

மழை


இளைப்பாறிக் கொள்ள

வெய்யில்


அவ்வப்போது

எதையாவது

கிறுக்கி வைக்க

பூ முளைத்த பேனா


நொடி நொடியாய்

மரணித்து வாழ

நிரந்தர சொர்க்கம்


இதைத் தவிர

வேறென்ன வேண்டும்?


நீயும் காதலையே

தேர்ந்தெடுத்துக் கொள்!


Published with Blogger-droid v2.0.4