Saturday, 30 June 2012

நிலா ரசிகன்

நிலா ரசிகன்
¤
கோவிலில் அர்ச்சனை
செய்ய அவள் பெயர் சொன்னேன்..
என்ன நட்சத்திரம்
என்று கேட்கும்
அர்ச்சகருக்கு
எப்படிப் புரியவைப்பேன்?
அவள் நிலா என்று!
¤
அமாவாசையன்று
உன் பக்கத்துவீட்டுக்
குழந்தை என்னிடம் கேட்டது
இன்னிக்கு நிலா எங்கே போயிருச்சு என..
அதற்கு எப்படித் தெரியும்?
நீ ஊருக்குப் போனது!
¤
சந்திரன் என்னும்
ஆண்பால்
நிலா என்று
பெண்பாலானது
உன்னால்!
¤
நிலா சூரியனைச்
சுற்றுகிறது என
தவறாகச் சொல்லியிருக்கிறது
விஞ்ஞானம்..
எனக்குத் தெரிந்து நீ யார் பின்னாலும்
சுற்றுவதில்லையே..
உன் பின்னால்தானே
எல்லோரும் சுற்றுகிறார்கள்!
¤
மனிதனால் நிலாவில்
கால்வைக்கத்தான்
முடிந்தது..
நாங்கள் குடியேறியேவிட்டோம்
என்கிறது உனது
ஸ்டிக்கர்பொட்டும்
லிப்ஸ்டிக்கும்!
¤
தயவுசெய்து நகம்
கடிக்கும்
நல்லபழக்கத்தை
விட்டுவிடாதே..
அப்புறம் உன் காலடியில் நான் சேகரிக்க உதிர்ந்து கிடக்காது எனக்கான
பிறைநிலாத் துண்டுகள்!
¤
சீக்கிரம் உன்வீட்டு
வாசலுக்கு வா..
எதிர்வீட்டுக்
குழந்தைக்கு
நிலாச்சோறு
ஊட்ட வேண்டுமாம்!
¤

கடைசி காதல் கடிதம்::

இதுவரை கடித வரிகளால் காதல் வரி கட்டிக் கொண்டிருந்த எனக்கு இந்த கடிதத்தோடு வரிவிலக்கு அளிக்கப் படுகிறது! உனக்குத் தெரியாது.. உனக்காய் வாங்கி வைத்த உதிரம் வழியும் சிவப்பு ரோஜாக்கள் எல்லாம் உவர்ப்பு ரோஜாவாய் மாறிய உண்மை! முன்பெல்லாம் கவியெழுதும் பேனா பூக்காம்பாய் மாறும்! இன்று ஏனோ தீக்கூம்பாய் எரிக்கிறது! தெரியாமல் உன் விரல் பட்டுவிடும் போதெல்லாம், தெரிந்தே மின்னல் கீற்றை தொட்டுப் பார்த்தவன், இன்று உனை விட்டுப் போக நினைக்கையில் எமனிடம் எனை விற்றுப்போக துணிகிறேன்! இத்துடன் உன் இதயம் நனைக்க என் கண்ணீர் துளிகளால் பன்னீர் துளிகளை அனுப்பியுள்ளேன்! நனைக்கவில்லை என்றால் சொல் செந்நீர் துளிகளை அனுப்புகிறேன்! இது எனது கடைசி கடிதமாய் இருப்பினும், நீ எழுதும் பதில் உனக்கு முதல் காதல் கடிதமாய் அமையட்டும்!
இப்படிக்கு,
உன் வாசிப்பில் வசிக்கும் நான்!

வேஷம்::

வரவேற்பறை
பூஜையறை
சமயலறை
படுக்கையறை
குளியலறை
என, என் வீட்டின் எல்லா அறைகளிலும் உன் வாசம் விட்டுப்போகும் நீ, உன் இதய அறையில் மட்டும் இன்னும் எதற்கடி உன் காதலை வேஷமிட்டு மறைக்கிறாய்??

ஆதலால் மழை ரசிப்பீர்::

எப்படி
வேண்டுமானாலும்
கவிதை எழுதலாம்
என்று சொல்லிப்
போகிறது
வெயிலோடு வரும்
மழை!
¤
ஒருகோப்பை
தேநீரோடு மழையை ரசிக்க
நீயிருக்கிறாய்
உன்னோடு மழையை ரசிக்க
நானிருக்கிறேன்
மழையோடு மழையை ரசிக்கத்தான்
யாருமில்லை!
¤
ஆலங்கட்டி பொறுக்கித் தின்னும்
குழந்தையை
நனைப்பதாய் நினைத்து
தன்னைத்தானே
நனைத்துக்கொள்கிறது
அந்திமழை!
¤
புயல்மழை காரணமாக இன்று
பள்ளி விடுமுறை..
இப்படித்தான்
முதன்முதலாய்
மழை ரசனை
ஆரம்பமாகிறது!
¤
ஒருகோப்பை தேநீரை
மணிக்கணக்கில்
சுவைப்பதற்கு
மழையை விட
சிறந்த காரணம்
ஏதுமில்லை!
¤
விடாமழையை
யாரும் விமர்சிக்க வேண்டாம்..
அது வீட்டினுள்
பத்திரமாய் அடைத்து
வைக்கப்பட்டிருக்கும்
குழந்தைகளை
நனைக்கும்
சந்தர்பத்திற்காக
காத்திருக்கிறது!

Friday, 29 June 2012

குழந்தை::

நாத்திகன்
மனைவிக்கு
பிரசவம்
வீல் என்ற
சத்தத்துடன்
பிறக்கிறார்
கடவுள்!

காதல்ககாலம்::

இறந்த காலத்தை
நிகழ்காலத்திலும்
நிகழ்காலத்தை
எதிர்காலத்திலும்
சுமக்கச் செய்கிறது
காதல்!!

டைரி::

கோவிலுக்குச்
செல்லும் நல்ல
பழக்கத்தோடும்

ஏதாவதொரு
கெட்டபழக்கத்தை
விட்டுவிடும்
உறுதிமொழியோடும்
ஜனவரி 1 ல்
ஆரம்பித்து

கும்மாளமும்
குடியுமாய்
புத்தாண்டை
வரவேற்ற கதையோடு
டிசம்பர் 31 ல்
முடியும்
பெரும்பாலான
டைரிகளின்
குறிப்புகள்!

ஒவ்வொன்றின்
உள்ளேயும்
பிப்ரவரி 14 ஆம்
நாளில்
சொல்லப்பட்ட
காதலோ
கொல்லப்பட்ட
காதலோ

கட்டாயம்
புதைந்திருக்கும்!

நட்பு
பகை
ஏமாற்றம்
அவமானம்
சந்தோசம்
காதல்
பிரிவு
துரோகம்
குற்றம்
என

அடுக்கடுக்காய்
சொல்லப்
பட்டிருக்கும் அதன்
அடுத்தடுத்த
பக்கங்களில்!

அவ்வப்போது
தெரிந்தே செய்த
தவறுகள்
அப்பட்டமாய்
ஒப்புக்கொள்ளப்
பட்டிருக்கும்!

ஏதும் எழுதப்படாது
வெற்றுத்தாளாய்
கிடக்கும் ஓரிரு
நாட்கள்தான்
எழுதியவனின்
அமைதியான
தினங்கள்..

இவ்வாறாக
பன்முகங்களையும்
ஒளிவுமறைவின்றி

வெளிச்சமிட்டுக்
காட்டும்
டைரிகள்

இப்போது
பத்திரமாக
அவரவர் வீடுகளில்
ஒளித்து வைக்கப்
பட்டிருக்கிறது..

பரண் மேலும்
அஞ்சறைப்
பெட்டியின்
கீழும்..!