Monday, 13 August 2012

கடிதம் : 7

கிழிபடாத காதல்

கடிதங்கள் : 7



7.1.1998           1.30 am


பிருந்தா என்கிற

தேவதைக்கு,


விட்டில்பூச்சிகள் சத்தமிடும் நள்ளிரவில் நான்

எழுதும்

நடுநிசிக் கடிதம் இது..


இரவுகள் எத்தனை அழகானவை என்பது

விழித்திருப்பவனுக்கே

தெரியும்..


பகல் முழுக்க உன்

கடிதத்தை சட்டைப் பையில்

வைத்துச் சுற்றிய

போதுதான் புரிந்தது..

சட்டைப் பை ஏன்

இதயத்தின் ஓரமாய் வைத்து

தைக்கப்பட்டிருக்கிறது

என்னும் ரகசியம்!


உனது நேற்றைய

கடிதத்தில் ஒருகணம் கடவுளைக் கண்டேன்!

கடவுளும் காதலும் ஒன்றுதான் என்றது அக்கடிதம்!


எப்படி உன்னால்

காதலை இவ்வளவு

சுருக்கமாகவும்

நெருக்கமாகவும்

சொல்ல முடிந்தது?


அது கடிதமா கவிதையா என்ற வியப்பு இன்னும்

என்னைவிட்டு அகலவில்லை..

ஒருவேளை அது

தேவதைகளின் மொழியாகக்கூட இருக்கலாம்!


வாசிக்க வாசிக்க, காதலை சுவாசிக்கச் சொல்லும் உனது

முதல் காதல்

கடிதத்தை (கவிதையை) மீண்டுமொரு முறை படித்துப் பார்க்கிறேன்...


அன்புள்ள என்

ஆண்தேவதைக்கு,

எனக்குள் திமிறிக்

கொண்டிருந்த உனக்கான எனது காதலை,

இந்த முன்னிரவில்

கடிதத்தின் வழியே உன்னிடம்

இறக்கி வைக்கிறேன்..

இதயம் ஏந்திப் பெற்றுக்கொள்!


இப்படிக்கு...

ப்ரியமுள்ள

பிருந்தா.


எப்படி நான்கே வரிகளில் உனது

அகநானூற்றை படைத்தாய் என்ற,

வியப்பில் ஆழ்ந்திருந்த வேளையில்,


கண்விழித்துப் பார்த்த என் அம்மா என்னை உறங்கச் சொல்லி

சத்தமிட்டாள்...


பாவம்..

அவளுக்கு எப்படித் தெரியும்?


எனக்குள் ஆயிரம்

இளையராஜாக்கள்

இசைத்துக்

கொண்டிருக்கும்

மாயக் கச்சேரி பற்றி...??!


♥ தீராக்காதல் உனக்குள் இன்னும்

ஊறட்டும் ♥


            இப்படிக்கு,

     உன் வாசிப்பில்

               வசிக்கும்

                நான்...♥


(பரிமாற்றம் தொடரும்.....)


Published with Blogger-droid v2.0.4

கடிதம் : 6

கிழிபடாத காதல்

கடிதங்கள் : 6



18.12.1997        6.30 pm


பிருந்தா என்கிற தேவதைக்கு,


எனது  வலி நிரம்பிய முந்தைய

கடிதத்தால்தான்

என் காதலுக்கு ஒரு வழி

பிறந்திருக்கிறது!

ஆறுமாதங்களுக்குப்

பிறகு முதன்முதலாய்,

யோசித்துச் சொல்கிறேன்

என்று எழுதியிருக்கிறாய்.


அதெப்படி?

ஆண்கள்

எவ்வித தயக்கமுமின்றி

காதலை சொல்கையில்,

பெண்கள் யோசிக்கமல் சொல்கிறார்கள்...

யோசித்துச்

சொல்கிறேன் என!


ஒருவேளை இதுதான் காதலுக்கு

முதல் வெட்கம்

அரங்கேறும் நேரமோ??


உனக்கு நான்..

எனக்கு நீ...

நமக்கு காதல்...

என்றிருக்க

வேறெதற்கு யோசனை?

வா... காதலிக்கலாம்!


♥உனது சிந்தையிலும்

சிந்தனையிலும்

காதல் நிரம்பட்டும்♥


            இப்படிக்கு,

     உன் வாசிப்பில்

               வசிக்கும்

                நான்...♥


(பரிமாற்றம் தொடரும்.....)


Published with Blogger-droid v2.0.4

Sunday, 12 August 2012

கடிதம் : 5

கிழிபடாத காதல்

கடிதங்கள் : 5



15.10.1997        11.30 pm


பிருந்தா என்கிற தேவதைக்கு,


உனது கடிதங்களில்லாத இந்த இரண்டுமாத காலத்தில்தான்

என் பலவீனம் உணர்ந்தேன்.

என்ன காரணமோ

என்னை தவிர்க்க நினைத்து என் காதலை தவிக்கச் செய்தாய்..!


இப்போதெல்லாம்

எனக்குள் பட்டாம்பூச்சிகள்

படபடப்பதில்லை..


இதயத்தில் புல்லாங்குழலின் ரீங்கார அதிர்வுகளில்லை..


பூக்காம்பாய் இருந்த பேனா முட்கள் இன்று

தீக்கூம்பாய் எழுத்துக்களை எரிக்கிறது..

அவ்வப்போது இடியுடன் கூடிய

கனமழையொன்று கண்களில் பொழிகிறது..


அஞ்சல் தூதுவர்களான

உன் தோழியும் எனது நண்பனும் கூட காதல்மொழி

பேசி கரைந்து கொண்டிருக்க,


நான் மட்டும்

உறைந்துபோய்க்

கிடக்கிறேன்!


அன்று நீ தந்த வாழ்த்து அட்டைகளின்

வரிகளில்தான்

இன்னும் வாழ்ந்து

கொண்டிருக்கிறது

என் காதல்!


ஞாபகமிருக்கிறதா?

அன்று நீ எழுதித்தந்த வரிகள்?


"புற்களைச் சுமந்த பூமி

பனித்துளிகளின் சரணாலயம்..

உன்னைச் சுமக்கும் என் இதயம்

நட்பின் சரணாலயம்.."


இதைத்தான் இரவும் பகலும்

இடைவிடாது ஜெபித்துக் கொண்டிருக்கிறேன்!

உன்னைச் சுமக்கும் என் இதயம் காதலின்

சரணாலயம் என

கொஞ்சம் திருத்தி!


போதும்....


இனியும் உன் மௌனம் தாங்க

துளிகூட திராணியில்லை எனக்கு.


பைத்தியக்காரன்,

வழிப்போக்கன்,

நண்பன், பகைவன்

என என்னை நீ

என்ன வேண்டுமானாலும்

நினைத்துக்கொள்..

நான் உன்னையேதான்

நினைத்துக்

கொண்டிருப்பேன்!


♥ காதல் உன்னை

கொஞ்சம் கொஞ்சமாய்

நெருங்கட்டும் ♥


            இப்படிக்கு,

     உன் வாசிப்பில்

               வசிக்கும்

                நான்...♥


(பரிமாற்றம் தொடரும்.....)


Published with Blogger-droid v2.0.4

Saturday, 11 August 2012

கடிதம் : 4

கிழிபடாத காதல்

கடிதங்கள் : 4

¤

5.8.1997        7.30 pm


பிருந்தா என்கிற தேவதைக்கு,


நீ நட்பை தேர்ந்தெடுத்த நாளிலிருந்து, நீண்டு வளர்ந்திருக்கிறது நமது கடிதப் பரிமாற்றங்கள்..

ஒவ்வொரு கடிதத்திலும் நீ என்னைப்பற்றியும்

என் படிப்பைப் பற்றியுமே விசாரித்துக் கொண்டிருக்க,

நானோ காதல் பற்றியே சொல்லிக் கொண்டிருக்கிறேன்.


அறிவை வளர்க்க எனக்கு நீ பல புத்தகங்களை சிபாரிசு செய்திருந்தாலும்,

காதல் வளர்க்க கலீல் ஜிப்ரானையும், ஷேக்ஸ்பியரையுமே

நான் தேடிப் படிக்கிறேன்.


நீ ஒருமுறையாவது

காதலன் என்னும் வார்த்தையை என்

மீது பிரயோகிக்க மாட்டாயா என ஏங்கிக் கொண்டிருக்கிறேன்.


ஆனால் நீயோ,

எத்தனைமுறை

வேண்டினாலும்,

வார்த்தைகளை கல்லாக்கிக் கொண்டு மௌனப்புன்னகை

மட்டுமே புரியும்

அந்தக் கோவில்

சாமி சிலையை போல

பள்ளி(க்கூட) அறையில் வீற்றிருக்கிறாய்!


உனக்குள் காதல் குடியிருப்பதை நான் நன்கு அறிவேன்..


நீதான் நட்பென்னும்

போர்வைக்குள்

காதலை ஒளித்துவைத்து

விளையாடிக்

கொண்டிருக்கிறாய்.


ஒருநாள், காதல் உன்னைக் காட்டிக் கொடுத்துவிடும்... ஜாக்கிரதை!


அந்த நாள் விரைவில் வந்துவிட வேண்டும்..


இல்லையெனில்

இன்று பட்டாம்பூச்சி பிடித்து சிரிக்கும் நான்,என்றாவதொரு

நாளில் பைத்தியம் பிடித்து சிரிக்க நேரும்!


ஞாபகம் வைத்துக்கொள்..

நீ என்

காதலியானால் மட்டுமே

காதல் முழுதாய்

பூரணத்துவமடையும்!

என் வாழ்வும்

கூட.......!


காதல் எனது

பிரார்த்தனைக்கு

செவி சாய்க்கட்டும்!!


            இப்படிக்கு,

     உன் வாசிப்பில்

             வசிக்கும்

                  நான்...


( பரிமாற்றம் தொடரும்.....)


Published with Blogger-droid v2.0.4

Friday, 10 August 2012

கடிதம் : 3

கிழிபடாத காதல்

கடிதங்கள் : 3

¤

25.7.1997                8.30 pm


பிருந்தா என்கிற தேவதைக்கு,


மழைபெய்து வானவில் பூத்திருந்த ஒரு அந்திமப்பொழுதில்

உன் முதல்கடிதம் எனக்கு கிடைத்திருந்தது.

அடிவானத்தோடு சேர்ந்து ஆண்மனமும் வெட்கம் அள்ளிப் பூசிய, அந்த பொன்மஞ்சள் நிமிடங்களை எப்படி வர்ணிப்பேன்?


கடிதம் கொண்டுவந்த உனது தோழியின் முகமெங்கும் உன் சாயல் கண்ட அந்த பரவச நொடிகள், என் முன்ஜென்மத்தில் கூட நிகழ்ந்திருக்காது!


உள்ளே ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும்

காதலோடு அமைதியாய் வீடு வந்தேன்!

கைகள் கலவரத்தில் நடுங்க, கனமான கடித உறை பிரித்தேன்.


உனது கடிதத்தோடு என்

முதல் இரண்டு கடிதங்களையும் பத்திரமாய் திருப்பி அனுப்பியிருந்தாய்.

கிழிக்க மனமில்லையென.

தேவதைகள் ஒருபோதும் இதயத்தை கிழிப்பதில்லை!


நிலவொளியில் நட்சத்திரங்களாய்

சிதறிக் கிடந்த உன் குட்டி எழுத்துக்களை வாசிக்க ஆரம்பித்தேன்.


அன்புள்ள நண்பனுக்கு என்ற உனது முதல் வரியிலேயே நீ நட்பை தேர்ந்தெடுத்திருந்ததை,

பரிதாபமாய் பார்த்தது என் காதல்.


கடிதம் முழுக்க எனக்கான அறிவுரைகள்..

மாதா பிதா குரு தெய்வம் என எவரும் இதுவரை

சொல்லிராததை

எவ்வளவு அழகாய் சொல்லியிருக்கிறது

உன் நட்பு?


முதல் பென்ஞ்சில் அமர்ந்து நன்றாக பாடத்தை கவனிக்கச் சொல்லியிருந்தாய்..

உனக்குத் தெரியாது..


பாடத்தோடு சேர்த்து உன்னையும் கவனிக்கவே நான்

கடைசி பென்ஞ்சில்

அமர்ந்திருக்கிறேன் என!


கடைசியாய், இப்படிக்கு உன் அன்புத்தோழி என முடித்திருந்தாய்.

எனக்கு ஏதும் வருத்தமில்லை..


எனக்குத் தெரியும்..

நட்போடு தொடங்கிய காதல் என்றுமே மரித்துப்

போனதில்லை!


நம்பிக்கையோடு

காத்திருப்பேன்....


அழியா நட்பு என்

அழகிய காதலை

ஆசீர்வதிக்கட்டும்!!


            இப்படிக்கு,

     உன் வாசிப்பில்

             வசிக்கும்

                  நான்...


( பரிமாற்றம் தொடரும்.....)


Published with Blogger-droid v2.0.4

Thursday, 9 August 2012

கடிதம் : 2

கிழிபடாத காதல்

கடிதங்கள் : 2

¤

21.6.1997   9.00 pm


பிருந்தா என்கிற தேவதைக்கு,


கடிதம் பெற்று ஒருவாரமாகியும்

பதிலேதும் இல்லாததால் இந்த இரண்டாவது கடிதம்.

அள்ள அள்ளக் குறையாத காதலை முதல் கடிதத்தில் நான் உன்னிடம் கொட்டியிருந்தும்,

நீ அதை மெல்ல மெல்ல மறைத்தபடியே வலம்

வந்துகொண்டிருக்கிறாய்!


அங்கீகாரமுமின்றி

நிராகரிப்புமின்றி நிலைகொள்ளாது

ஊசலாடித் தவிக்கும் காதல்,

எவ்வளவு வலி நிரம்பியதென ஒருவாரத்திலேயே உணர்ந்தேன்.

உன் இயல்பில் எவ்வளவு தேடியும்

ஒரு மாறுதலையும்

கண்டறிய முடியவில்லை!


எதிர்வரும் போதும் சரி, எதிர்பார்த்த போதும் சரி, அதே

அலட்டிக்கொள்ளாத

அழகுடனே கடந்து செல்கிறாய்.


எனது கடிதம் என்னவாகியிருக்கும்?

வழக்கமான காதல் கடிதங்களைப் போல படிக்கப்படாமலே,

கிழிபட்டிருக்குமா?


படித்து முடித்தபின் கிழிபட்டிருக்குமா?


இல்லை, இன்னும்

படிக்கப்படவில்லையா? என

ஏதும் தெரியாவிட்டாலும்,

ஒரு இனம் புரியாத அகர்பக்தியின் வாசம் போல்

கமகமத்துக்

கொண்டிருக்கிறது

என் மனம்..


வகுப்பறையில் அவ்வப்போது நீ வீசும் கத்திப்பார்வை மட்டும் இப்போது

கொஞ்சம் கூர் தீட்டப்பட்டிருக்கிறது..

மற்றபடி

வேறொன்றும்

நானறியேன்!


எப்படியோ என் தீராக்காதலை உன்னிடம்

கொட்டித் தீர்த்துவிட்டேன் அது போதும் எனக்கு!

இனி நீ என்ன முடிவு சொன்னாலும் நான் என் முடிவிலிருந்து

மாறப்போவதில்லை.


காதலின் குணம் காத்திருப்பதென்றால்,

காதலியின் குணம்

காத்திருக்க வைப்பது போல...

சரி,

நான் காத்திருக்கிறேன்...


காதல் உனக்குள்ளும்

பிரவேசிக்கட்டும்!!!


            இப்படிக்கு,

     உன் வாசிப்பில்

             வசிக்கும்

                  நான்...


( பரிமாற்றம் தொடரும்.....)


Published with Blogger-droid v2.0.4

Wednesday, 8 August 2012

கடிதம் : 1

கிழிபடாத காதல்

கடிதங்கள் : 1

¤

12.6.1997   10pm


பிருந்தா என்கிற தேவதைக்கு,


அதிகபட்ச அழகுடன் இருக்கும் உன்னை குறைந்தபட்சம்

தேவதையென்றாவது

அழைத்தாக வேண்டும். ஏற்றுக்கொள்வாயாக!

பதினைந்துமுறை

எழுதியெழுதி

கசக்கியெறிந்து,

பதினாறாவது

முறையாய்

எழுதுகிறேன்

உனக்கான என்

உயர்எழுத்துக்களை!


எதை எழுதும்போதும் பிள்ளையார்

சுழியோடு ஆரம்பிக்கும் நான்

இந்த முதல் கடிதத்தை

இதயக் குறியோடு

தொடங்கியுள்ளேன்.

இதிலிருந்தே உனக்குத்

தெரிந்திருக்கும்..

எப்படி ஆரம்பிப்பது என்பதைக்கூட,

காதல் எனக்கு கற்றுத் தந்திருக்கிறதென்று!


இக்கடிதத்தை, நான் எப்போதோ

எழுத நினைத்திருக்கிறேன்!

ஆனால் என்னை காதல் இப்போதுதான்

தேர்ந்தெடுத்துள்ளது.

இந்தக் காதல் கடிதத்தால் நீ என்னைத் தேர்ந்தெடுப்பாயா?


சம்மதம் சொல்லும் உன்

கண்ணசைவிற்காக

காத்திருக்கிறேன்.

மற்ற காதலர்களைப் போல என்னால் என்

உதிரம் தொட்டெல்லாம்

கையெப்பமிட முடியாது..

ஏனென்றால் என் இரத்தம் மொத்தத்திலும்

கலந்திருக்கும்

உன்னை ஒருபோதும்

நழுவ விட நான்

தயாராயில்லை..

என் வெள்ளையணுக்களில்

கொள்ளையாய் இருப்பதும் நீயே!

என் சிவப்பணுக்களில்

உவர்ப்பாய் உலவுவதும் நீயே!


நீ என்ன சொல்வாயோ என்பதை விட

இந்தக் கடிதத்தை என்ன செய்வாயோ

என்ற பயம் கலந்த

பதற்றத்துடன்

கொடுத்தனுப்புகிறேன்....


காதல் எனது கடிதத்தைக் காக்கட்டும்!!


            இப்படிக்கு,

     உன் வாசிப்பில்

             வசிக்கும்

                  நான்...


( பரிமாற்றம் தொடரும்.....)


Published with Blogger-droid v2.0.4