Tuesday, 31 July 2012

பழக்கமில்லாத காதல்::¤

எனக்குள்ளும்

எப்போதாவது

வண்ணத்துப்பூச்சிகள்

வட்டமடித்துக்

கொட்டமடிக்கும்...


ஆம்பல் பூக்கள்

அழகழாய்ப்

பூத்துப்பூத்து

இதயம் மணக்கும்..


ஆயிரம்புள்ளிக்

கோலமொன்றை

அரைநொடியில்

மனம் வரையும்..


அடிவயிற்றில்

மின்னல் கீற்றொன்று

ஆழமாய்

லயம் பரப்பும்..


மாத்திரையில்

உயிர் யாத்திரை

நிகழ்த்திக் கொண்டிருக்கும்

அம்மாவும்


கன்னியாஸ்திரியாய்

காலம் தள்ளிக்

கொண்டிருக்கும்

அக்காவும்


என்

எண்ணத்தில்

எழாதவரையில்


இப்படித்தான்

ஆரவாரமாய் என்னுள்

வாழ்ந்து கொண்டிருக்கும்..


எனக்கின்னும்

பழக்கப்படாத

இந்தக் காதல்!

¤


Published with Blogger-droid v2.0.4

ெமாழி::¤

உறக்கத்தில்

நீ உளறுவதாய்

சலித்துக் கொள்கிறாள்

உன் அன்னை..

பாவம்!

அவளுக்கு எப்படித்

தெரியும்?

பூக்களின் மொழி!

¤


Published with Blogger-droid v2.0.4

Monday, 30 July 2012

சுயசரிதை::¤

நான் என்னைப்பற்றிய

சுயசரிதை எழுத

நேர்ந்தால்

அத்தனை பக்கங்களிலும்

உனது பெயர்தான்

எழுதப்பட்டிருக்கும்!

¤


Published with Blogger-droid v2.0.4

Sunday, 29 July 2012

நான்...நீ...மழை...¤

மழை பற்றி

ஏதும்

தெரியாது..

நனைவதைத் தவிர!

¤

அப்போது பெய்த

மழையும்

இப்போது பெய்யும்

மழையும்

இனி எப்போதோ

பெய்யப்போகும்

மழையும்

நானும் நீயும்

நனையத்தான்!

¤

மழையால்

பள்ளி விடுமுறை..

வெளியே செல்ல

அனுமதிக்காத

வகுப்பறையாகிறது

கதவடைத்த வீடு!

¤

நான்..

நீ...

மழை..

நடுவே

சொட்ட சொட்ட

நனைந்து

கொண்டிருக்கிறது

காதல்!

¤

இடி மேளத்தோடு

மின்னல் சாட்டையை

சுழற்றியபடி

மேகக் குதிரையில்

அதிவேகமாய்

தரையிறங்கிக்

கொண்டிருக்கும்

கடவுளுக்கு

பூலோகத்தில்

கறுப்புக் கம்பளம்

விரித்து வரவேற்பு!

¤


Published with Blogger-droid v2.0.4

ஓவியம்::¤

நான் வரைந்த

ஒவ்வொரு

ஓவியமும்

ஒவ்வொரு கதை

சொல்ல,

உன்னை வரைந்த

ஓவியம் மட்டும்

கவிதை சொல்கிறது!

¤


Published with Blogger-droid v2.0.4

Saturday, 28 July 2012

உயிர்:::¤

கையிலிருக்கும்

மதுக் கோப்பையில்

நிரம்பி வழிகிறது

தோற்றுப்போன

காதல்..

மிச்சமிருக்கும்

உயிரையும்

பருகிக்கொள்ள!

¤

உயிரைக் கொடுக்கும்

நண்பனும் நானும்

பருகி மகிழ்கிறோம்

உயிரெடுக்கும்

உல்லாச பானம்!

¤

பீர் பாட்டில்கள்

உரசிக்கொள்ளும்

சியர்ஸ் சத்தத்தின்

முடிவில் மௌனமாய்

ஒலிக்கிறது

தினக்கூலியின்

சில்லறை சப்தம்!

¤


Published with Blogger-droid v2.0.4

Friday, 27 July 2012

பரிசு::¤

ஹேண்ட் பேக்

லிப்ஸ்டிக்

சுடிதார்

கொலுசு

ஒற்றை ரோஜா

இதில் எதை

உனது பிறந்தநாளுக்கு

பரிசளிக்கலாம்

என்று யோசித்தபடியே

உன்னைச் சந்திக்க

வந்தேன்..


நீயோ

கோவில் வாசலில்

விற்றுக் கொண்டிருந்த

பலூன்

வேண்டுமெனக்

கேட்டாய்..

நான் ஒரு முட்டாள்!


காதலிக்கு என்னென்ன

பிடிக்குமென

பட்டியலிடத் தெரிந்த

எனக்கு

குழந்தைக்கு

என்னென்ன பிடிக்கும் என

சிந்திக்கத் தெரியாமல்

போய்விட்டது!

¤


Published with Blogger-droid v2.0.4

Thursday, 26 July 2012

பிறப்பு:::¤

பிறப்பின் மர்மம்

¤

முப்பதாம் வயதில்

முதன்முதலாய்

என்னை நானே

திரும்பிப் பார்க்கிறேன்..


சமைத்து விளையாடிய

மண்சோற்றில் நட்பு ஒட்டியிருக்கிறது..


கள்ளிச் செடியில் காதல் பூத்திருக்கிறது..


பிரிவின் முட்கள்

நெஞ்சில் தைத்திருக்கிறது..


பலபேரை அழவைத்தும்

சிலபேரை சிரிக்க வைத்தும் கடந்திருக்கிறது என் முந்தைய வயதுகள்..


பட்டதாரி

பக்திமான்

துரோகி

கவிஞன்

காமுகன் என எந்த

வேடமும் கச்சிதமாய் பொருந்திப் போகிறது..


அநாதை ஆசிரமம்

சென்று தர்மனாகவும்


வக்கிர எண்ணங்களை மறைத்து வைத்து அமைதிக்காக ஆலயம் செல்கையில் புத்தனாகவும்


அயோக்கியத்தனத்தை

அடியோடு மறுத்து யோக்கியனாகவும்


என்னமாய் நடித்து

வலம் வந்திருக்கிறேன்!


யோசித்துப் பார்க்கையில்

முப்பது வருடங்களில்

முழுதாய் ஓர்நிமிடம்

கூட என்னை நான்

உணரவில்லை!


ஏதோ சில கணங்களில் மட்டும்

மங்காத தமிழைக்

கொண்டு வார்த்தைகளுக்கு

வர்ணம் பூசி அதை

கவிதைகளென

ஆங்காங்கே தெளித்து அதில்

கொஞ்சம்

ஆத்மதரிசனம்

பெற்றிருக்கிறேன்!


இறைவா...

இனி வரும் நாட்களிலாவது

என்னை அறியும் எண்ணத்தையும்

பிறரை அறிய

முயற்சிக்காமல்

அவர்களை

அப்படியே ஏற்றுக்கொள்ளும்

குணத்தையும்


கூட்டத்திலிருக்கும் போதுகூட

தனித்திருக்கும்

அமைதியையும்


வாழ்க்கையை வாழும் கலையையும்

எனக்கு உணர்த்துவாயாக!


நான்

கணேஷ்குமாராக

பிறக்கவில்லை...

ஆனால்

கணேஷ்குமாராக

இறக்க விரும்புகிறேன்!


போலித்தனமும்

பிறருடைய நகலும்

என்னை நெருங்காமல்

நான் நானாக இரு(ற)க்கும் வரம்

வேண்டும்!!


Published with Blogger-droid v2.0.4

ஆரப்பம்::¤

என் நண்பன் பகைவனாக

ஆரம்பிக்கிறான்

அவன் பகைவன்

எனக்கு நண்பனாக

ஆரம்பித்ததிலிருந்து!

¤


Published with Blogger-droid v2.0.4

கவிதை::¤

எத்தனை முறை

முயன்றும் என்னால்

கவிஞனாக

முடியவில்லை...

கவிதையாகவே

இருக்கும்

உன்னைப்பற்றி

எப்படிக்

கவிதை எழதுவது?

¤


Published with Blogger-droid v2.0.4

Wednesday, 25 July 2012

முன்னேற்றம்::

¤
கொட்டாங்குச்சியிலிருந்து
அட்டை டம்ளர்..
முன்னேற்றத்தோடு
நாகரீகத்
தீண்டாமை!
¤

Tuesday, 24 July 2012

இசையானவள்::

¤
ச-ரி-க-ம-ப-த-நி
ஏழு ஸ்வரங்கள்..
ஏழாவது
ஸ்வரம்- நி
எட்டாவது
ஸ்வரம்- நீ...!
¤

கட்டுரை:2

¤
தேவதைத்
தேடல்கள்
¤
"திருமணம் சொர்க்கத்தில்
நிச்சயிக்கப் படுவதும்
உன்னோடு நிச்சயக்கப்படுவதும்
ஒன்றுதான்" என்னும்
எனது கவிதையோடு
தொடங்குகிறேன்.
முன்பெல்லாம்
மாப்பிள்ளை கிடைப்பது பெரும்பாடென்றால்
இன்று பெண்
கிடைப்பது அதைவிடப்
பெரும் பாடாய் இருக்கிறது.
இருபத்தைந்து
வயதிலிருந்து ஆண்மகனுக்கு
பெண்பார்க்க ஆரம்பிக்கிறார்கள்.
ஆனால்
அதில் பலருக்கு
முப்பத்தைந்தில்தான்
திருமணம் நடக்கிறது.
என்ன காரணம்?
அழகிருந்தால் படிப்பில்லை
படிப்பிருந்தால் வேலையில்லை
வேலையுமிருந்தால்
சொத்தில்லை..
இதற்கு யார் காரணம்?
ஆண் தான் காரணம். ஆமாம்..
பெண்ணைப் பெற்ற ஆண்தான்
அதிகளவில் காரணம்.
பெண்ணை நல்ல இடத்தில் கட்டிக்
கொடுத்து அவள் நல்லாயிருக்கனும்
என்று நினைப்பதில்
தவறேதுமில்லை!
ஆனால் 'நல்ல'
வரனை தேர்ந்தெடுப்பதில்
பலசமயம் தவறிவிடுகிறார்கள்.
சுயதொழில் செய்பவனை மதிப்பதில்லை..
அவனுக்கு கட்டிக் கொடுத்தால் பெண்ணும் கஷ்டப்படனுமாம்!
என்ன சிந்தனை இது?
நூற்றுக்கு தொண்ணூற்றொன்பது
சதவிகிதம்
பெண்ணின் வாழ்க்கை பற்றி
யோசிக்கிறார்களே தவிர
பெண்ணின் விருப்பம் பற்றி
தெரிந்துகொள்ள
யாருக்கும் அக்கறையில்லை!
எனக்குத் தெரிந்து
ஒரு பெண் நேரடியாகவே
சொல்லி நொந்திருக்கிறது
என் அப்பா எந்த வரனிலும்
திருப்தியடைய
மாட்டேன்கிறாரென்று.
எந்த லட்சணத்தில்
இருக்கிறது பாருங்கள்
பாரதி கண்ட புதுமைப் பெண்களின் நிலை?
எனது நண்பர் ஒருவருக்கு 3 வருடங்களாக பெண் தேடுகிறார்கள்.
அளவான அழகு,
பட்டதாரி,
சுயதொழில்
நல்ல சம்பாதனை
இருந்தும் பெண்
கொடுக்க யாருமில்லை.

பெண்ணைப் பெற்றவர்கள்
நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்..
விதைத்ததைத்தான்
அறுவடை செய்தாக வேண்டும்.
நாளை உங்கள் மகளுக்கு ஒரு ஆண் பிறந்தால் அவனுக்கும் இதே நிலைதான்!
போதும்!
இனிமேலும் முதிர்காளைகளை
உருவாக்காதீர்கள்!
ஆரம்பத்தில் நல்ல குடும்பத்தில் பிறந்த ஒழுக்காமான
பையனா இருந்தா
போதுமென்று சொல்லிவிட்டு,
நாட்கள் நகர நகர
சொத்து இல்லை,
பத்தில்லை என்று
பணத்தாசை கொண்ட ஈனப்புத்தியோடு
வரன்தேடி அலையாதீர்கள்..
உங்கள் பெண்களை
தேவதையாக்குங்கள்.
தேய்பிறையாக்காதீர்!
இந்தக் கட்டுரை யாரையும் புண்படுத்த அல்ல!
ஒருசிலரை
மேம்படுத்தவே!
என்று சொல்லி முடிக்கிறோம்
முதிர்காளைகளின்
சார்பாக!
என்ன கொடுமை சார் இது?!
¤

கட்டுரை::1

நான் எழுத முயற்சித்த முதல்
கட்டுரை இது..
¤
தொலைந்து போன
கடிதங்கள்
¤
கடிதங்கள் என்பது
அனைவருக்கும்
அன்பானவர்களால்
பரிமாறப்படும்
மனதின் கூட்டாஞ்சோறு.
பேனா முனையில்
வழிந்தொழுகும்
எழுத்துக்களெல்லாம்
தொலைவிலிருப்போரின்
ஆன்மாவே.
சில சமயம் சிலவற்றைத் தாங்கிவரும் கடிதங்கள்
உண்மையிலுமே
ஒரு சுகதாங்கிதான்.
"தபால்காரன் தெய்வாமாவான்" என
'காதலித்துப்பார்' என்ற கவிதையில்
சொல்லியிருப்பார் வைரமுத்து.
உண்மையில் பலபேர்க்கு கடிதங்களே சிலசமயம் தெய்வமாகியிருக்கும்!
அது வேலைக்கான
அழைப்பாயிருக்கலாம், அல்லது
காதலுக்கான அங்கீகரமாகவும் இருக்கலாம்.
அயல்தேசத்திலிருக்கும்
மகனுக்கு தாயும்,
கிராமத்திலிருக்கும்
தாய்க்கு மகனும்
அனுப்பும் கடிதங்கள்
பெரும்பாலும்
அஞ்சல்கொடி உறவாய்த்தானிருக்கும்!
காலம் மாறிவிட்ட நிலையில்
இப்போதெல்லாம்
முன்போல கடிதங்கள் எழுதப்படுவதுமில்லை,
அனுப்பப்படுவதுமில்லை!
எல்லாம் இ-மெயிலும், SMS-ம்
செய்த மாயம்.
எனது பள்ளிப்பருவத்தில்
நடந்த நிகழ்வு இது..
அப்போது எனது பாட்டியின் கிராமத்தில் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து நியூ இண்டியன்
கிரிக்கெட் டீம் என்று ஒரு டீமை
உருவாக்கியிருந்தோம்.
அதற்காக விளையாட்டு உபகரணங்கள் வாங்க ஆளுக்கு 25 ரூபாய் நிர்ணயித்திருந்தோம்.
நான் மட்டும் வெளியூர் என்பதால், எனக்கு
அதை தெரிவிக்க
நண்பனொருவன்
எனது பள்ளிக்கு
எனது வகுப்பைக்
குறிப்பிட்டு
என் பெயருக்கு ஒரு கடிதம் எழுதிவிட்டான்..
அதில் கடைசியாக
இப்படிக்கு நியூ இண்டியன் கிரிக்கெட் டீம் என்ற பெயர் வேறு!
ஆசிரியர் பாடம்
நடத்திக்
கொண்டிருக்கையில்
கடிதம் வந்தது.
கேட்கவா வேண்டும்?
கணக்கு வாத்தியார் எனக்கு நல்ல பாடம் கற்பித்துவிட்டார்!
இப்படி கடிதங்கள் பற்றிய கற்பனைகளை
நினைத்துப் பார்க்கையில்
இ-மெயிலும் Sms-ம்
அவ்வளவு ரசனையுள்ளதாய்
தோன்றவில்லை!
இன்றும் நான்
பத்திரப்படுத்தி வைத்திருக்கும் கடிதங்களையும்
நண்பர்களின்
வாழ்த்து அட்டைகளையும்
எடுத்துப்பார்த்து
பெருமூச்சோடு
எழுந்து செல்கிறேன்..

நண்பனுக்கு
மெயில் அனுப்ப
கணிணிக்காரனைத் தேடி!
¤

கனவு மெய்ப்பட வேண்டும்::

¤
சுவாசத்தால்
உயிர் வாழ்தலை
விட மாத்திரை
வாசத்தால் உயிர் வாழும்
நோயுலகம்
வேண்டாம்

கல்விக்கண் திறந்த காமராஜ நாட்டினில்
கல்விக்கடை திறக்கும்
ராஜ தந்திரக்
கூடங்கள் வேண்டாம்

செயல்தனில் செயலிழந்து வெறும்
வாய்ப்பேச்சில்
வாள் வீசும்
வீரமும்
வேண்டாம்

அகத்தில் வளரும்
அக்னிக்குஞ்சுகள்
புறத்தில் பசி
வந்ததும்
பறந்தோடும்
ஏழ்மையும்
வேண்டாம்

ஆன்மீகத்தில்
பெண்மீகம் தேடும் போலிக்
கடவுளர்கள்
வேண்டாம்

பால்புட்டி தவிர்த்து
காசுக்கு கைநீட்டும்
அநாதைப் பிஞ்சுகள்
வேண்டாம்

வேண்டாம் வேண்டாமென்ற
இத்தனை
கனவும் மெய்ப்பட

வீட்டிற்கொரு
பாரதியும்
வீதிக்கொரு
சாரதியும்
மீண்டும் மீண்டும்
பிறந்திட வேண்டும்

மாயத்தில் மாண்ட
என்னுலகம்
மீண்டிட
வேண்டும்!

இந்தக் கனவாவது
மெய்ப்பட வேண்டும்
¤

Monday, 23 July 2012

கதை::

¤
எத்தனை நாளைக்கு
கவிதை எழுதுவது?
மாறுதலுக்கு
ஒரு கதை எழுதலாம்
என்றெண்ணி
எழுத
ஆரம்பிக்கிறேன்...
ஒரு ஊரில் ஒரு
ராணி இருந்தாள்...
என மீண்டும்
நினைவுகள்
உன்னையே சுற்ற,
எழுத ஆரம்பித்த
சிறுகதை
பெருங்
கவிதையாகிப் போனது
ஒரு தனிக்கதை..!
¤

Sunday, 22 July 2012

பழமொழி::

¤
பழையன கழிதல்
என்னும் பழமொழி
சாயம் போன
சேலைகளை
சந்தோசமாய்
பெற்றுக் கொள்ளும்
வேலைக்காரிக்கு
மட்டும்
பொருந்துவதில்லை
¤

அழகு::

¤
அலங்காரப் பொருட்களால்
நிரம்பி வழிந்த
எனது
அலங்கோலமான
வீட்டினை,
அழகான வீடாக்கியது
முன்வாசல்
தூணில் படர்ந்திருந்த அந்த
ஒற்றைக் கொடி!
¤

Saturday, 21 July 2012

மழையழகி::

¤
மழைக்கு ஒதுங்க
நீ என்
தோட்டத்துப் பக்கம்
வந்து போயிருந்ததை
சொல்லியது
உன் கால் தடத்திற்கு
குடைபிடித்துக்
கொண்டிருந்த
காளான் கூட்டங்கள்!
¤
ஒரு மழைநாளில்
நிழற்குடையினுள்
என்னருகே
கொஞ்சநேரம்
நின்றிருந்து
மழை நின்றதும்
நீ சென்றுவிட்டாய்..
அன்றிலிருந்து
எனக்குள்
பெய்து கொண்டிருக்கிறது
இடியுடன் கூடிய
மழை!
¤
எனக்கு மழை
பிடிக்கிறதோ
இல்லையோ
முழுதாய் நனைந்து
கொள்கிறேன்..
ஈரத்தோடு வரும்
என்னை நீ
இழுத்தணைத்து
தலை துவட்டுவாயென!
¤
எதிர்பாரா
மழைநேரங்களில்
எதிர்பார்த்தே
காத்திருக்கிறேன்
தேநீரோடு
நீ தரும்
இளஞ்சூட்டு முத்தங்களை!
¤
நல்லவேளை
மழையில்
நனைந்துவிட்டாய்..
இல்லையென்றால்
இன்னும் சில மணி
நேரங்களுக்கு மழை
நீடித்திருக்கும்!
¤

காத்திருப்பு::

¤
விறுவிறுப்பான
கதைப் புத்தகத்தின்
கடைசி பக்கம்
காணாமல்
போனதைப்
போலத்தான்..
உன்னை எதிர்பார்த்து
காத்திருந்து
நீ வராமல் போன
அந்த
ஏமாற்ற நாட்கள்!
¤

Thursday, 19 July 2012

வசதி::

¤
உனது கோபம் கூட
எனக்கு வசதியாய்த்தான்
இருக்கிறது...
நீ திட்டி முடித்ததும்
ஒரு முத்தம்
கிடைக்குமே!!
¤

Wednesday, 18 July 2012

அநாதை::

¤
ஈன்றவர்கள்
இல்லையென்றால்
அநாதையாம்...
படைத்தவனே!
பக்தர்கள்
இல்லையென்றால்
நீ கூட
அநாதைதான்!!
¤

கிருஷ்ண மோகம்:::

¤
ஒரு காலை ஊன்றி
மறு காலை சாய்த்தபடி மடக்கி
ஊன்றி புன்னகைக்கும்
அந்த கிருஷ்ணன்
சிலையில் மோகம்
கொள்ளாதவர்
யாருமிருக்க முடியாது!

அப்படித்தான்
கரங்களில்
புல்லாங்குழலையும்
கண்களில் மயக்கத்தையும்
ஏந்தி மோன
நிலையிலிருந்த
சிலையை நான்
வீட்டிற்கு வாங்கி
வந்தது!

வந்த கொஞ்சநாளில்
உச்சியில் இரு
மயில்பீலிகளையும்
தோள்களில்
மல்லிகைச் சரத்தையும்
சிறு நெற்றியில்
சந்தனச் சாந்தையும்
சூட்டி அழகு பார்த்தேன்!

அவ்வப்போது
மினுமினுக்கும்
அவன் மேனியை
தொட்டுத் தொட்டு
ரசித்தேன்

என்னென்ன செய்தும்
அவன் முழு அழகைக்
காண்பதில்
ஒவ்வொரு
முறையும் தோற்றுப் போனேன்!

வீட்டில் சிலை
வைக்கக் கூடாதென்று சிலரும்
சிலை வைத்து
வணங்கினால்
பிரம்மச்சரியனாவாய்
என்று சிலரும்

தீட்டுப்படாமல்
பரிசுத்தமாய்
பாதுகாக்க
முடியாதென்று
சிலரும்
சாஸ்த்திரம் பேச,

சபையில் அமர்ந்து
ஆட்சி புரிந்தவனை
சாக்கில் கட்டித்
தூக்கிப் போனார்
தந்தை...
கோவிலில் குடியமர்த்த!

மயில்பீலி கலைந்து
மல்லிகை வாடிய
நிலையில்
மதியில்லா
மாந்தர்களோடு
அன்பையும்
காதலையும்
பரிமாறிக்கொள்ள
முடியாதென
மீண்டும்
கோவில் சிறைக்குள்
அடைபட்டு
ஆசிர்வாதம் வழங்க
தயாரானான்
கலியுகக் கண்ணன்!
¤

Tuesday, 17 July 2012

கோலம்::

¤
நீரால்
நீ வரைந்த
பத்துப்புள்ளிக்
கோலம்
உன் கால்
தட ஈரம்..!
¤

Monday, 16 July 2012

கெஞ்சல்::

¤
திருவிழாக்
கடைக்காரனிடம்
கெஞ்சிக்
கொண்டிருக்கிறேன்...
நீ வரும்போது
மட்டும் என்னை ஒரு
வளையல்காரனாய்
மாற்றிவிடும்படி!
¤

யுகம்::

¤
கடன் வாங்கினால்
திருப்பிக்
கொடுப்பதில்லை..
கலியுகம்!
இதயம் கொடுத்தால்
திரும்பக்
கேட்பதில்லை..
காதல்யுகம்!
¤

Sunday, 15 July 2012

மழைநாள்::

¤
என்றோ ஒரு
மழைநாளில் தான்
வீடெங்கும்
ஈசல்கூட்டங்கள்
விளையாடி மடிகிறது

என்றோ ஒரு
மழைநாளில் தான்
தேநீரின் சுவை
இரட்டிப்பாகிறது

என்றோ ஒரு
மழைநாளில் தான்
புதையுண்ட விதை
முளைக்கிறது

என்றோ ஒரு
மழைநாளில் தான்
வளர்ந்த மரம்
வேரோடு
சாய்க்கப்படுகிறது

என்றோ ஒரு
மழைநாளில் தான்
கலைந்த காதல்,
கவிதையாக்கப்
படுகிறது

என்றோ ஒரு
மழைநாளில் தான்
வண்ணத்துப்
பூச்சியின்
வண்ணம் கரையுமா
என்ற சந்தேகம் எழுகிறது

என்றோ ஒரு
மழைநாளில் தான்
விடாமழை
சபிக்கப்படுகிறது

என்றோ ஒரு
மழைநாளில் தான்
மழையோடு நனைந்து
தன்னைக்
கரைக்கும்
ரசனை
நிகழ்கிறது
¤

Thursday, 12 July 2012

ஆரம்பம்::

¤
மீசை முளைத்த
நாளிலிருந்து
எனக்கும்,
முகப்பரு முளைத்த
நாளிலிருந்து
உனக்கும்
காதல் முளைக்க
ஆரம்பித்து விட்டது!
¤
பருவம் புதைத்து
வைத்திருக்கும்
விதைகள்
காதல் காலத்தில்
முளைவிட
ஆரம்பிக்கிறது
முகப்பருக்களாக!
¤
நிலாவில் கூட
களங்கமுண்டு
என்கிறது
உனது முகப்பரு!
¤

Wednesday, 11 July 2012

கடவுளும் நானும்::

¤
அந்தக் கடவுளுக்கு
பசுவின் உயிர் கரந்து
பாலாபிஷேகம் செய்தேன்

இந்தக் கடவுளுக்கு மெய்வருத்திய கூலிதனை
உண்டியல்
காணிக்கையாக்கினேன்

அந்தக் கடவுளுக்கு
பூக்களைக் கொலை
செய்து
பூஜை செய்தேன்

இந்தக் கடவுளுக்கு
அசைவப் படையலிட்டு
விருந்து வைத்தேன்

அந்தக் கடவுளும்
இந்தக் கடவுளும்
எந்தக் கடவுளும்
இதில் எதையும்
கேட்கவில்லை

இருந்தும்
கேட்காமலே
கொடுத்துக் கொடுத்து
அதுவும் இதுவும்
வேண்டுமென்று
கேட்கிறேன்
பகுத்தறிவு கேளாத
நான்!
¤

Tuesday, 10 July 2012

கவிஞன்::

¤
பக்தி
முற்றிப்போய்
சாமியாராவதைப்
போலத்தான்
காதல்
முற்றிப்போய்
கவிஞனாவதும்!
¤

Monday, 9 July 2012

மழையெழுத்து::

¤
புதையுண்ட
விதையின்
தலையெழுத்தை
மாற்றுகிறது
மழையெழுத்து!
¤
ஒவ்வொரு முறையும்
அழுதுகொண்டே
விழுகிறது மழை..
ஒதுங்க இடமின்றி
தத்தளிக்கும்
பிளாட்பாரவாசிகளைக்
கடக்கையில்!
¤
நனையாமலிருக்க
நீ பிடித்தோடும்
துப்பட்டாக்குடையை
வானவில் என
நினைத்த வானம்
நிறுத்திக் கொள்கிறது தனது
பெருமழையை!
¤
நேரத்தோடு
உறங்கிப்போகும்
குழந்தைக்காக
மரங்கள்
சேமித்து வைத்திருக்கிறது
நடுநிசிமழையை!
¤
அழுத்தாமல் எழுதிக்
கொண்டிருக்கும்
மழையெழுத்தோடு
தன் விரலெழுத்தையும்
சேர்த்தெழுதுகிறது
குழந்தை..
கண்ணாடி
ஏற்றிவிட்ட
காரில்
பயணித்தபடி!
¤

Sunday, 8 July 2012

வெட்கம் பூசிய கவிதைகள்::

¤
உன் வெட்கம்
பற்றி நான் எழுத
நினைத்ததெல்லாம்
வெட்கப்பட்டுக் கொண்டே
என்னுள் கிடக்கிறது
இன்னும்
வெளிவராத
கவிதைகளாய்!
¤
தைரியத்தை
வரவழைத்துக் கொண்டு
உன்னை முத்தமிட
நெருங்குகையில்
எவ்வளவு
எச்சரிக்கையாய்
இருந்தாலும் என்
வீரம் ஓடி
ஒளிந்துகொள்கிறது
உன் வெட்கத்தின் பின்னால்!
¤
கொஞ்சம் வெட்கப்பட்டுக்
காட்டேன்!
தொட்டாச்சிணுங்கி
பற்றி நான்
அறிய வேண்டும்!
¤
தேவதை என்று
நான் சொல்லும்
சிறு பொய் கேட்டு
முகம்மூடி
வெட்கப்படுகிறாயே..
வெட்கப்படும் போது
உண்மையாகவே
தேவதையாகி விடுகிறாய்!
¤
நான் உனக்குத் தரும்
ஒவ்வொரு முத்தமும்
எனக்குத் திரும்பக்
கிடைக்கிறது
வெட்கம் பூசிய
கவிதைகளாய்!
¤

Saturday, 7 July 2012

ஏக்கம்::

¤
பச்சைக்கலர் புடவை
எடுப்பாயிருக்குமா
நீலக்கலர் புடவை
எடுப்பாயிருக்குமா
என்ற நீண்ட யோசனைக்குப்
பிறகு

என்னை இன்னும்
கொஞ்சம் சிவப்பாய்க்
காட்டக்கூடிய
நீலக்கலர்
புடவையை
தேர்ந்தெடுத்தேன்!

ரோஜாவா மல்லிகையா
என்று ஒருநாள்
முன்கூட்டியே
தோழிகளோடு
கூடிப்பேசி
மணக்கும்
மல்லிகையை
சூடிக்கொண்டேன்!

மாப்பிள்ளை வந்தாச்சு
மாப்பிள்ளை வந்தாச்சு என்ற
தந்தையின்
கிசுகிசுப்புக் குரலில்
பரபரப்பானது வீடு!
படபடப்பானது
மனது!

முதுகுத்தண்டு
வியர்வையால்
பிசுபிசுக்க
முகமெல்லாம்
வெட்கம் அள்ளிப் பூசிக்கொள்ள

கால் கட்டை விரலைப்
பார்த்தபடி
கையில் காபி டம்ளருடன்
வலம்வந்த பிறகு

முன் அறைக்குள்
சென்று கதவிடுக்கில்
கண்புதைத்து

பதிலேதும் சொல்லாமல்
கைகூப்பி விடைபெறும்

அந்த
பதினைந்தாவது
மாப்பிள்ளையை
ஏக்கத்தோடு
பார்த்தபடியே
நிற்கிறேன்

அழகால்
அங்கீகரிக்கப்
படாத
அழுக்குத் தேவதையாய்!
¤

Friday, 6 July 2012

காதலி::

¤
எப்போதும்
என்னுடனேயே இரு!

என் செவி மடல்களை உன்
முத்தத்தால் சூடாக்கு!
என் செவ்விதழ்களை
உன் பக்கம் வைத்துக்
களைப்பாக்கு!

என் விரல் ஸ்பரிசத்தால்
சிணுங்கிக்
கொண்டேயிரு!
உன் மௌனத்திலும்
என்னுள் அதிர்ந்து
கொண்டேயிரு!

உறக்கத்தின்
போது என்
தலைமாட்டிலும்
பயணத்தின் போது
என் இதயத்தின்
ஓரத்திலும்
சாய்ந்திரு!

நான் உன்னை
என்ன செய்தாலும்
கண்டுகொள்ளாதே!
உன்னை ஏதாவது
செய்ய என்னைத்
தூண்டிக் கொண்டேயிரு!

எனது தனிமைகளை
முழுவதுமாய்த்
தின்று
என்னைக் கொஞ்சம்
கொஞ்சமாய்க்
கொன்றுவிடு!

என்னுயிர்
"செல்போன்" காதலியே!
எப்போதும்
என்னுடனேயே இரு!
¤

எழுதியதில் பிடித்தது::

நான் எழுதியதில் பிடித்தது
¤
படைத்தல் காத்தல்
அழித்தல்
இம்மூன்றையும்
செய்வது
இறைவனென்றால்
வாழ்தலை காதல்
செய்கிறது
¤
மாதா பிதா குரு
தெய்வம் நால்வரும்
போதிக்கும்
சாதி மதத்தை
கடைசிவரை
கற்றுக்கொள்வதேயில்லை
நட்பு
¤
ஐந்துபெண் பெற்றால்
அரசனும்
ஆண்டியாவான்
என்னும் பழமொழியை
திருத்தி எழுதுங்கள்
தேவதைகளின்
தந்தையாவான் என்று!
¤
தமிழைப் பற்றி
ஒரு கவிதையெழுதச்
சொன்னார்கள்..
நான் இப்படி
எழுதினேன்..
"தமிழ்"
¤
புத்தனை அறிந்திராத
நண்பனொருவனுக்கு
புத்தன் பற்றி மூச்சுவாங்காமல்
போதித்துக்
கொண்டிருந்தேன்..
ஒரு வார்த்தை கூட பேசாமல்
அமைதியாய்
உள்வாங்கிக்
கொண்டிருந்தான்
நண்பன் இன்னொரு
புத்தனாக!
¤
திருமணம்
சொர்க்கத்தில்
நிச்சயக்கப்படுவதும்
உன்னோடு
நிச்சயக்கப்படுவதும்
ஒன்றுதான்!
¤

Thursday, 5 July 2012

காதல்:::

¤
வெளியே
அமைதியாகத்தான்
வலம்வந்து
கொண்டிருக்கிறேன்...
உள்ளே
ஆர்பரித்துக்
கொண்டிருக்கும்
உன் காதலால்!
¤
ஆக்குவது கடினம்
அழிப்பது சுலபம்
என்னும் தத்துவத்தை
அடியோடு
மாற்றி விட்டது
காதல்!
¤
துக்கம் மறக்க
தூக்கம் என்றால்
தூக்கம் மறக்க
காதல்!
¤
கடவுள், தேவதை
என்ற
வார்த்தைகளிலிருந்து
மொழிபெயர்க்கப்பட்ட
கவிதை காதல்!
¤
உண்ண மறந்து
உறங்க மறுத்து
கண்டதையெல்லாம்
கவிதை செய்து
கண்முன்னே
காணாமல் போகிறாயா?
அப்படியானால்
காதல் உன்னைத்
தேர்ந்தெடுத்திருக்கிறது!
¤
இன்று
பட்டாம்பூச்சி பிடித்து
சிரிக்கும் நீ,
நாளை
பைத்தியம்
பிடித்தும்
சிரிக்கலாம்
காதல் ஜாக்கிரதை!
¤
கேட்பதையெல்லாம்
கொடுக்கும்
கற்பக விருட்சகத்தை
விட
உயர்வானது
கேட்காததையும்
கொடுக்கும்
காதல்!
¤

Wednesday, 4 July 2012

காதல்::

¤
கொஞ்ச நேரமே
கொஞ்சிக்கொள்ளும்
கூடல் முடிந்த பின்
நீயும்
உறங்கிவிடுகிறாய்..
நானும்
உறங்கிவிடுகிறேன்..
விடியவிடிய
விழித்துக்
கொண்டிருக்கிறது
காதல் மட்டும்!
¤

Tuesday, 3 July 2012

மழை வாசம்:::

¤
நீர் மூலம்
ஆக்குவதும்
நிர்மூலமாக்குவதும்
மழை அறிந்த
கலை!
¤
நனையாதே
சளி பிடிக்கும்
என்கிறாள் அம்மா..
எனக்கு மழை
பிடிக்கும் என்கிறது
குழந்தை!
¤
யார் என்ன சொன்னார்களோ?
கோபத்தில் குதிக்கிறது
கல் மாரி!
¤
மழை பெய்ய
ஆரம்பிக்கும் போதே
முளைவிட
ஆரம்பித்து
விடுகிறது
(க)விதை!
¤
எவ்வளவு
எச்சரிக்கையுடன்
குடைக்கண் விரித்து நனையாமல்
நடந்து சென்றாலும்
சாரல் என்ற கடைக்கண்ணால்
தீண்டிவிடுகிறது
மாமழை!
¤

Sunday, 1 July 2012

கடவுைளத்தேடி....

பத்துரூபாய்
சிறப்பு தரிசன வரிசையில்
பெருமிதத்தோடு
கடவுளைக் காண
முன்னேறிக்
கொண்டிருக்கிறேன்..
ஒருவேளை
கடவுள்
நீண்ட
பொதுதரிசன வரிசையில்
கால்கடுக்க காத்திருக்கும்
கடைசி
பக்தனுக்கு
அருகில் கூட நின்று
கொண்டிருக்கலாம்!

போதை::

இமைகள்
விழிகள்
இதழ்கள்
செவிகள்
உன்னில் நீ
இவ்வளவு
கள்ளை
வைத்திருந்தால்
யாருக்குத்தான்
போதையேறாது??