Thursday 26 July 2012

பிறப்பு:::



¤

பிறப்பின் மர்மம்

¤

முப்பதாம் வயதில்

முதன்முதலாய்

என்னை நானே

திரும்பிப் பார்க்கிறேன்..


சமைத்து விளையாடிய

மண்சோற்றில் நட்பு ஒட்டியிருக்கிறது..


கள்ளிச் செடியில் காதல் பூத்திருக்கிறது..


பிரிவின் முட்கள்

நெஞ்சில் தைத்திருக்கிறது..


பலபேரை அழவைத்தும்

சிலபேரை சிரிக்க வைத்தும் கடந்திருக்கிறது என் முந்தைய வயதுகள்..


பட்டதாரி

பக்திமான்

துரோகி

கவிஞன்

காமுகன் என எந்த

வேடமும் கச்சிதமாய் பொருந்திப் போகிறது..


அநாதை ஆசிரமம்

சென்று தர்மனாகவும்


வக்கிர எண்ணங்களை மறைத்து வைத்து அமைதிக்காக ஆலயம் செல்கையில் புத்தனாகவும்


அயோக்கியத்தனத்தை

அடியோடு மறுத்து யோக்கியனாகவும்


என்னமாய் நடித்து

வலம் வந்திருக்கிறேன்!


யோசித்துப் பார்க்கையில்

முப்பது வருடங்களில்

முழுதாய் ஓர்நிமிடம்

கூட என்னை நான்

உணரவில்லை!


ஏதோ சில கணங்களில் மட்டும்

மங்காத தமிழைக்

கொண்டு வார்த்தைகளுக்கு

வர்ணம் பூசி அதை

கவிதைகளென

ஆங்காங்கே தெளித்து அதில்

கொஞ்சம்

ஆத்மதரிசனம்

பெற்றிருக்கிறேன்!


இறைவா...

இனி வரும் நாட்களிலாவது

என்னை அறியும் எண்ணத்தையும்

பிறரை அறிய

முயற்சிக்காமல்

அவர்களை

அப்படியே ஏற்றுக்கொள்ளும்

குணத்தையும்


கூட்டத்திலிருக்கும் போதுகூட

தனித்திருக்கும்

அமைதியையும்


வாழ்க்கையை வாழும் கலையையும்

எனக்கு உணர்த்துவாயாக!


நான்

கணேஷ்குமாராக

பிறக்கவில்லை...

ஆனால்

கணேஷ்குமாராக

இறக்க விரும்புகிறேன்!


போலித்தனமும்

பிறருடைய நகலும்

என்னை நெருங்காமல்

நான் நானாக இரு(ற)க்கும் வரம்

வேண்டும்!!


Published with Blogger-droid v2.0.4

No comments:

Post a Comment