Wednesday 18 July 2012

கிருஷ்ண மோகம்:::

¤
ஒரு காலை ஊன்றி
மறு காலை சாய்த்தபடி மடக்கி
ஊன்றி புன்னகைக்கும்
அந்த கிருஷ்ணன்
சிலையில் மோகம்
கொள்ளாதவர்
யாருமிருக்க முடியாது!

அப்படித்தான்
கரங்களில்
புல்லாங்குழலையும்
கண்களில் மயக்கத்தையும்
ஏந்தி மோன
நிலையிலிருந்த
சிலையை நான்
வீட்டிற்கு வாங்கி
வந்தது!

வந்த கொஞ்சநாளில்
உச்சியில் இரு
மயில்பீலிகளையும்
தோள்களில்
மல்லிகைச் சரத்தையும்
சிறு நெற்றியில்
சந்தனச் சாந்தையும்
சூட்டி அழகு பார்த்தேன்!

அவ்வப்போது
மினுமினுக்கும்
அவன் மேனியை
தொட்டுத் தொட்டு
ரசித்தேன்

என்னென்ன செய்தும்
அவன் முழு அழகைக்
காண்பதில்
ஒவ்வொரு
முறையும் தோற்றுப் போனேன்!

வீட்டில் சிலை
வைக்கக் கூடாதென்று சிலரும்
சிலை வைத்து
வணங்கினால்
பிரம்மச்சரியனாவாய்
என்று சிலரும்

தீட்டுப்படாமல்
பரிசுத்தமாய்
பாதுகாக்க
முடியாதென்று
சிலரும்
சாஸ்த்திரம் பேச,

சபையில் அமர்ந்து
ஆட்சி புரிந்தவனை
சாக்கில் கட்டித்
தூக்கிப் போனார்
தந்தை...
கோவிலில் குடியமர்த்த!

மயில்பீலி கலைந்து
மல்லிகை வாடிய
நிலையில்
மதியில்லா
மாந்தர்களோடு
அன்பையும்
காதலையும்
பரிமாறிக்கொள்ள
முடியாதென
மீண்டும்
கோவில் சிறைக்குள்
அடைபட்டு
ஆசிர்வாதம் வழங்க
தயாரானான்
கலியுகக் கண்ணன்!
¤

No comments:

Post a Comment