Friday 10 August 2012

கடிதம் : 3

கிழிபடாத காதல்

கடிதங்கள் : 3

¤

25.7.1997                8.30 pm


பிருந்தா என்கிற தேவதைக்கு,


மழைபெய்து வானவில் பூத்திருந்த ஒரு அந்திமப்பொழுதில்

உன் முதல்கடிதம் எனக்கு கிடைத்திருந்தது.

அடிவானத்தோடு சேர்ந்து ஆண்மனமும் வெட்கம் அள்ளிப் பூசிய, அந்த பொன்மஞ்சள் நிமிடங்களை எப்படி வர்ணிப்பேன்?


கடிதம் கொண்டுவந்த உனது தோழியின் முகமெங்கும் உன் சாயல் கண்ட அந்த பரவச நொடிகள், என் முன்ஜென்மத்தில் கூட நிகழ்ந்திருக்காது!


உள்ளே ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும்

காதலோடு அமைதியாய் வீடு வந்தேன்!

கைகள் கலவரத்தில் நடுங்க, கனமான கடித உறை பிரித்தேன்.


உனது கடிதத்தோடு என்

முதல் இரண்டு கடிதங்களையும் பத்திரமாய் திருப்பி அனுப்பியிருந்தாய்.

கிழிக்க மனமில்லையென.

தேவதைகள் ஒருபோதும் இதயத்தை கிழிப்பதில்லை!


நிலவொளியில் நட்சத்திரங்களாய்

சிதறிக் கிடந்த உன் குட்டி எழுத்துக்களை வாசிக்க ஆரம்பித்தேன்.


அன்புள்ள நண்பனுக்கு என்ற உனது முதல் வரியிலேயே நீ நட்பை தேர்ந்தெடுத்திருந்ததை,

பரிதாபமாய் பார்த்தது என் காதல்.


கடிதம் முழுக்க எனக்கான அறிவுரைகள்..

மாதா பிதா குரு தெய்வம் என எவரும் இதுவரை

சொல்லிராததை

எவ்வளவு அழகாய் சொல்லியிருக்கிறது

உன் நட்பு?


முதல் பென்ஞ்சில் அமர்ந்து நன்றாக பாடத்தை கவனிக்கச் சொல்லியிருந்தாய்..

உனக்குத் தெரியாது..


பாடத்தோடு சேர்த்து உன்னையும் கவனிக்கவே நான்

கடைசி பென்ஞ்சில்

அமர்ந்திருக்கிறேன் என!


கடைசியாய், இப்படிக்கு உன் அன்புத்தோழி என முடித்திருந்தாய்.

எனக்கு ஏதும் வருத்தமில்லை..


எனக்குத் தெரியும்..

நட்போடு தொடங்கிய காதல் என்றுமே மரித்துப்

போனதில்லை!


நம்பிக்கையோடு

காத்திருப்பேன்....


அழியா நட்பு என்

அழகிய காதலை

ஆசீர்வதிக்கட்டும்!!


            இப்படிக்கு,

     உன் வாசிப்பில்

             வசிக்கும்

                  நான்...


( பரிமாற்றம் தொடரும்.....)


Published with Blogger-droid v2.0.4

No comments:

Post a Comment