Monday 13 August 2012

கடிதம் : 7

கிழிபடாத காதல்

கடிதங்கள் : 7



7.1.1998           1.30 am


பிருந்தா என்கிற

தேவதைக்கு,


விட்டில்பூச்சிகள் சத்தமிடும் நள்ளிரவில் நான்

எழுதும்

நடுநிசிக் கடிதம் இது..


இரவுகள் எத்தனை அழகானவை என்பது

விழித்திருப்பவனுக்கே

தெரியும்..


பகல் முழுக்க உன்

கடிதத்தை சட்டைப் பையில்

வைத்துச் சுற்றிய

போதுதான் புரிந்தது..

சட்டைப் பை ஏன்

இதயத்தின் ஓரமாய் வைத்து

தைக்கப்பட்டிருக்கிறது

என்னும் ரகசியம்!


உனது நேற்றைய

கடிதத்தில் ஒருகணம் கடவுளைக் கண்டேன்!

கடவுளும் காதலும் ஒன்றுதான் என்றது அக்கடிதம்!


எப்படி உன்னால்

காதலை இவ்வளவு

சுருக்கமாகவும்

நெருக்கமாகவும்

சொல்ல முடிந்தது?


அது கடிதமா கவிதையா என்ற வியப்பு இன்னும்

என்னைவிட்டு அகலவில்லை..

ஒருவேளை அது

தேவதைகளின் மொழியாகக்கூட இருக்கலாம்!


வாசிக்க வாசிக்க, காதலை சுவாசிக்கச் சொல்லும் உனது

முதல் காதல்

கடிதத்தை (கவிதையை) மீண்டுமொரு முறை படித்துப் பார்க்கிறேன்...


அன்புள்ள என்

ஆண்தேவதைக்கு,

எனக்குள் திமிறிக்

கொண்டிருந்த உனக்கான எனது காதலை,

இந்த முன்னிரவில்

கடிதத்தின் வழியே உன்னிடம்

இறக்கி வைக்கிறேன்..

இதயம் ஏந்திப் பெற்றுக்கொள்!


இப்படிக்கு...

ப்ரியமுள்ள

பிருந்தா.


எப்படி நான்கே வரிகளில் உனது

அகநானூற்றை படைத்தாய் என்ற,

வியப்பில் ஆழ்ந்திருந்த வேளையில்,


கண்விழித்துப் பார்த்த என் அம்மா என்னை உறங்கச் சொல்லி

சத்தமிட்டாள்...


பாவம்..

அவளுக்கு எப்படித் தெரியும்?


எனக்குள் ஆயிரம்

இளையராஜாக்கள்

இசைத்துக்

கொண்டிருக்கும்

மாயக் கச்சேரி பற்றி...??!


♥ தீராக்காதல் உனக்குள் இன்னும்

ஊறட்டும் ♥


            இப்படிக்கு,

     உன் வாசிப்பில்

               வசிக்கும்

                நான்...♥


(பரிமாற்றம் தொடரும்.....)


Published with Blogger-droid v2.0.4

No comments:

Post a Comment