Thursday 21 June 2012

பூக்காரி....

முதல் வியாபாரம் பேரம் பேசாம வாங்கிக்குங்க என்றபடி காலைகள் தொடங்கினால்

இந்தாங்க ரெண்டு ரூவா கம்மியா கொடுங்க என்றே முடியும் எனது மாலைகள்!

பூக்களின் வாழ்நாளை இன்னும் கொஞ்சம் நீட்டித்திருக்கலாம் இறைவன்!

ரோஜாவின் நஷ்டத்தை மல்லிகையிலும்
மல்லியின் லாபத்தை முல்லையிலும் ஈடுசெய்ய வேண்டியுள்ளது!

அவ்வப்போது புதுமனைவிக்கு பூ வாங்கித் தரச் சொல்லி கணவனை கட்டாயப்படுத்தவும்
வேண்டியுள்ளது!

வெள்ளிக்கிழமைகளில்
கோவில் வாசலில்
பேரமின்றி வியாபாரம் நடப்பினும்

பக்கத்து பூக்காரிக்குப் போட்டியாய் கூவிக்கூவித்தான் விற்றாக வேண்டும்!

மனிதர்களைப் போலவே பூக்களும் அடிக்கடி குணம் மாறும்!
சில சமயத்தில் நிறமும் மாறும்!

ஒருசமயம் சீக்கிரமாய் விரிந்து வியாபாரத்தை சுருங்க வைக்கும்!

மற்றொரு சமயம் தாமதமாய் அழுகி வியாபரத்தை அழகாக்கும்!

மணக்கும் மல்லியை சூட நினைக்கையில் பத்துரூபாய் வீணாகுமென
மனம் தடுக்கும்!

விதவிதமாய் என் கண்முன்னே
பூக்கள் இருப்பினும்
நானொரு ரசனை கெட்டவள்தான்!

மாலைக்குள் விற்றாக வேண்டும்...

இல்லையேல் மலரோடு வாடிவிடும் எனது
வயிறும்!

No comments:

Post a Comment