Saturday 30 June 2012

நிலா ரசிகன்

நிலா ரசிகன்
¤
கோவிலில் அர்ச்சனை
செய்ய அவள் பெயர் சொன்னேன்..
என்ன நட்சத்திரம்
என்று கேட்கும்
அர்ச்சகருக்கு
எப்படிப் புரியவைப்பேன்?
அவள் நிலா என்று!
¤
அமாவாசையன்று
உன் பக்கத்துவீட்டுக்
குழந்தை என்னிடம் கேட்டது
இன்னிக்கு நிலா எங்கே போயிருச்சு என..
அதற்கு எப்படித் தெரியும்?
நீ ஊருக்குப் போனது!
¤
சந்திரன் என்னும்
ஆண்பால்
நிலா என்று
பெண்பாலானது
உன்னால்!
¤
நிலா சூரியனைச்
சுற்றுகிறது என
தவறாகச் சொல்லியிருக்கிறது
விஞ்ஞானம்..
எனக்குத் தெரிந்து நீ யார் பின்னாலும்
சுற்றுவதில்லையே..
உன் பின்னால்தானே
எல்லோரும் சுற்றுகிறார்கள்!
¤
மனிதனால் நிலாவில்
கால்வைக்கத்தான்
முடிந்தது..
நாங்கள் குடியேறியேவிட்டோம்
என்கிறது உனது
ஸ்டிக்கர்பொட்டும்
லிப்ஸ்டிக்கும்!
¤
தயவுசெய்து நகம்
கடிக்கும்
நல்லபழக்கத்தை
விட்டுவிடாதே..
அப்புறம் உன் காலடியில் நான் சேகரிக்க உதிர்ந்து கிடக்காது எனக்கான
பிறைநிலாத் துண்டுகள்!
¤
சீக்கிரம் உன்வீட்டு
வாசலுக்கு வா..
எதிர்வீட்டுக்
குழந்தைக்கு
நிலாச்சோறு
ஊட்ட வேண்டுமாம்!
¤

No comments:

Post a Comment