Saturday, 30 June 2012

ஆதலால் மழை ரசிப்பீர்::

எப்படி
வேண்டுமானாலும்
கவிதை எழுதலாம்
என்று சொல்லிப்
போகிறது
வெயிலோடு வரும்
மழை!
¤
ஒருகோப்பை
தேநீரோடு மழையை ரசிக்க
நீயிருக்கிறாய்
உன்னோடு மழையை ரசிக்க
நானிருக்கிறேன்
மழையோடு மழையை ரசிக்கத்தான்
யாருமில்லை!
¤
ஆலங்கட்டி பொறுக்கித் தின்னும்
குழந்தையை
நனைப்பதாய் நினைத்து
தன்னைத்தானே
நனைத்துக்கொள்கிறது
அந்திமழை!
¤
புயல்மழை காரணமாக இன்று
பள்ளி விடுமுறை..
இப்படித்தான்
முதன்முதலாய்
மழை ரசனை
ஆரம்பமாகிறது!
¤
ஒருகோப்பை தேநீரை
மணிக்கணக்கில்
சுவைப்பதற்கு
மழையை விட
சிறந்த காரணம்
ஏதுமில்லை!
¤
விடாமழையை
யாரும் விமர்சிக்க வேண்டாம்..
அது வீட்டினுள்
பத்திரமாய் அடைத்து
வைக்கப்பட்டிருக்கும்
குழந்தைகளை
நனைக்கும்
சந்தர்பத்திற்காக
காத்திருக்கிறது!

No comments:

Post a Comment