Wednesday 20 June 2012

பருவப் பஞ்சாயத்து....

நேற்றுவரை ப்ரியாவாக இருந்து வந்த எனது தோழி
திடீரென ஒருநாள்
பூப்பு நன்னீராட்டு விழாவால் திருநிறைச் செல்வியாக்கப்பட்டாள்!

பருவப் பஞ்சாயத்துதான்
அவளுக்கு செல்வியெனும்
பட்டமளித்து
பச்சோலைக் குடிசைக்குள் குடியமர்த்தியது!

இதில் மாதத்தில்
மூன்றுநாள் விலக்கி வைக்கும்
மறைமுகத் தண்டனை வேறு!

அனைவரும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்
அவள் வெட்கத்தில் தலைகுனிந்து அமர்ந்திருப்பதாக!

ஆனால் அவளோ,
இனிமேல் பொட்டல் காட்டில்
நெடுநேரம் பசங்களோடு பல்லாங்குழியாட
முடியாத

அடைமழையில்
குடையின்றி நடைபோட முடியாத

சகோதரனின் சட்டையணிந்து
சங்கடமின்றி வலம்வர முடியாத
துக்கத்தில்
தலைகுனிந்திருந்தாள்!

பலநாட்கள் கழித்து
வெட்கத்தையும்
துக்கத்தையும்
கொஞ்சம் தள்ளி வைத்து துள்ளித் திரியத் தொடங்கிய நேரத்தில்

திருமதி எனும் தனது அடுத்த தீர்ப்போடு காத்திருந்தது
பருவப்பஞ்சாயத்து!

இந்த முறை
ப்ரியா ராமசாமியாகவோ
ப்ரியா ரவிக்குமாராகவோ
மீண்டும்
தலைகுனிந்து
அமரத்
தொடங்கினாள்
எனது தோழி ப்ரியா!

No comments:

Post a Comment