Monday 18 June 2012

ஏமாற்றம:::

உன்னை நானும்
என்னை நீயும்
எவ்வளவோ
ஏக்கங்களால்
ஏமாற்றியிருக்கிறோம்

பாவாடை தாவணியில் உனைப் பார்த்து
பரவசமடைய நினைத்த என்னை

அடிக்கடி ஆடை
விலகுமென்ற அச்சத்தால் ஏமாற்றினாய்

விடுமுறை நாளொன்றில் நீ செல்லும் தொலைதூரக் கோவிலுக்கு நானும் வரவா என கேட்கையில்
ஊர்க்காரன் பார்த்துவிடுவான் என்ற மடம் கலந்த பயத்தால் ஏமாற்றினாய்

நான் வாங்கித்தந்த
வெள்ளிச்சங்கிலியை
உன் தங்கக்கழுத்தில்
அணிய மறுத்து

தோழியர் கண்டு கொள்வர்
என்ற நாணத்தால் ஏமாற்றினாய்

அருகில் வருகையில் பேசத்துடித்த உன் உதடுகளை புறந்தள்ளி புன்னகையென்ற
பயிர்ப்பால் ஏமாற்றினாய்

இவ்வாறு சமுதாயம் உனக்கு போதித்த அச்சம்
மடம் நாணம் பயிர்ப்போடு
தகப்பன் கட்டளையும் சேர்ந்து வந்து
உனைத் தாக்க,

கண்மூடி தலைகுனிந்து
வேறொருவனுக்கு
கழுத்தை நீட்டினாய்...

வேறு வழியின்றி
நானும் வேறொருவளைக்
கட்டிக்கொள்ள,

நாம் விரும்பிக் கேட்ட பாடலும்
விரும்பிப் பேசிய
உரையாடலும்
ஏதாவதொரு சந்தர்ப்பத்தில்

எங்கேனும் ஒருதரம் கேட்க
நேரும் போதெல்லாம்

எண்ணிப்பார்க்க
நேரிடுகிறது..
ஏக்கங்களால் ஏமாற்றிய
நம்மை!!

No comments:

Post a Comment