Friday 29 June 2012

பூச்சாட்டுவிழா::

பூச்சாட்டு
விழாவின் போதுதான்
எங்கள்
புதுப்பாளையம்
கிராமம்
புதுப்பொழிவுடன்
காணக் கிடைக்கும்!

மூன்று வருடங்களாய்
சுண்ணாம்பு பூச்சுக்காணாத
வீட்டுச் சுவர்கள்

அன்று
வெள்ளைவெளிச்சத்தோடு
வீற்றிருக்கும்!

பகலெல்லாம்
மாரியம்மனையும்
மாகாளி அம்மனையும்
மாறிமாறி
பாடல்களால்
அழைத்துக்
கொண்டிருக்கும்
ஒலிப்பெருக்கிகள்

இரவு வந்ததும்
ஆட்டம் போடும்
ஆடவர்களை
அவரவர் பெயர்
சொல்லி
எங்கிருந்தாலும்
வரும்படி அழைக்கும்!

ஆறாம்நாளின்
இரவில்
பட்டுப்புடவையில்
புன்னகைத்தவாறு
அம்மன் ஜொலிக்க

கோவில் வளாகத்தினுள்
தாவணித் தேவதைகள்
உலா வர

அந்த முழு இரவும்
காளையரின்
கட்டுக்கடங்கா
நடனத்தோடும்

கன்னியரின்
கைதட்டும்
கும்மிப்பாட்டோடும்
விடியும்!

மறுநாள்
மஞ்சள்நீராட்டோடு
மகிழ்ச்சியாய்
முடியும் அந்த
ஏழுநாள் திருவிழா
இந்த வருடமும்
ஆரம்பமானது!

ஆட்டம்போடும்
ஆடவரெல்லாம்
அயல்தேசத்தில்
வேலையிலிருக்க

கலியுகக்
கன்னியரெல்லாம்
கல்லூரி விடுதியில்
கணிணி முன்
கிடக்க

ஏனைய மாந்தர்களும்
தொலைக்காட்சித்
தொடரில்
தொலைந்துபோயிருக்க

மங்கிய
வெளிச்சத்தில்
மாரியம்மனும்
மாகாளியம்மனும்
வாடிய முகத்தோடு
அருள்பாலித்தபடி
அமைதியாய்
பார்த்துக்
கொண்டிருக்கிறார்கள்

எவ்வித
பரபரப்புமில்லாமல்
ஒருவித
ஏமாற்றத்தோடு
முடியும் இந்த
பூச்சாட்டு விழாவை..!

No comments:

Post a Comment