Friday 29 June 2012

ஆசை அறுபதுநாள்

வாரச்சந்தையொன்றில்
வாங்கிவந்த அந்த
ஆட்டுக்குட்டியால்தான்
என் மகள் பிருந்தாவின்
சந்தோசம்
அதிகரித்திருந்தது

அடிக்கடி தன்
பிஞ்சுவிரல்களால்
அதன் குத்தும்
ரோமங்களை
வருடியபடியே
சிரித்திருந்தாள்!

என் மனைவி
விரட்டவிரட்ட
மீண்டும் மீண்டும்
அதை
மல்லிக்கொடியில்
மேயவிடுவாள்!

இப்படியாய்
அவள்பின்னால்
அதுவும்
அதன்பின்னால்
அவளும்
சுற்றியபடியே
அறுபதுநாட்கள்
கழிந்திருக்க

ஒரு ஞாயிற்றுக்
கிழமை மதியம்
சங்கடமின்றி
நடந்துமுடிந்தது
நேர்த்திக்கடன்
சடங்கு!

மல்லி இலை தின்று வளர்ந்த
ஆட்டுக்குட்டி
இப்போது
வாழையிலையில்
கிடக்கிறது
கருப்பசாமிக்கு
படையலாய்!

மொட்டையடித்து
காது குத்திக்
கொண்டிருந்த போது
வலியால் அழுதபடியே
ஆட்டுக்குட்டி பற்றி விசாரித்தாள்
பிருந்தா!

இன்றும்
எனக்கு நன்றாய்
ஞாபகமிருக்கிறது

நான் கடைசியாய்
கோவிலுக்குப்
போனது
அன்றுதான்..

No comments:

Post a Comment