Wednesday 20 June 2012

பலூன்காரன்:::

ஒவ்வொரு திருவிழாவின் போதும் எங்கிருந்தோ வந்து சேர்வான்
அடம்பிடிக்கும்
குழந்தைகளை
அடக்கியாளும்
பலூன்காரன்!

எத்தனைமுறை
முயன்றாலும்
முடிவதில்லை..
காற்று நிரப்பிய
பலூனின் ஒருமுனை கட்டி
அதை
உடையாமல் அடுத்த முனைக்கு
அழுத்தியெடுத்துச்
செல்லும் லாவகம்!

இப்படித்தான் உருவாகும் எல்லோர்க்கும் பொதுவான ஆப்பிள் வடிவ பலூன்கள்!

அப்புறம் திருகித்திருகிச் செய்யும் குழந்தைகளுக்கான
பொம்மை வடிவ பலூனிலிருந்து

இருமுனையை
இணைத்துக்கட்டி
செய்யும் காதலர்களுக்கான
இதயவடிவ பலூன்கள் வரை
ஒரே மூச்சில் பல
வடிவங்களை உயிர்ப்பிப்பான்!

ஒரு சிறிய விஷயத்தை ஊதி ஊதிப் பெரிதாக்குவது
அவனுக்கு சிறிய விஷயமானாலும்,

விரும்பி வாங்கும் குழந்தைகளுக்கு
அதுதான் மிகப்பெரும் விஷயம்!

காசைக் கரியாக்குவோர்க்கு
மத்தியில்,
காற்றையும் காசாக்கும் வித்தைக்காரன்!

பேருந்து நிறுத்தத்தில்,
கார் பயணத்தில்,
குழந்தைகளின் வீட்டில் என
எங்கெல்லாம்
பலூன்கள்
உடைபடுகிறதோ
அங்கெல்லாம் அவன்
வாழ்ந்துகொண்டே
தான் இருப்பான்..
அடுத்த திருவிழா
வரும் வரையில்!!

No comments:

Post a Comment