Saturday 16 June 2012

சபிக்கப்பட்ட தேவதைகள்::

யாருக்குத் தெரியும் உண்மையான தேவதை யாரென்று?

கவிதைக்கும் காதலுக்கும் வரம் வாங்கி வலம்வரும்
தேவதைகளுக்கு மத்தியில் அழகைக் களவாடிப்
பிறக்கத் தெரிந்திராத பல கண்ணியத் தேவதைகளும் இருக்கிறார்கள்!

எல்லோரும் அந்த
சபிக்கப்பட்ட தேவதைகளைக்
கண்டும் காணாமலும் கடந்து வந்துவிடுகிறோம்

நிறத்தால் நிராகரிக்கப்படும்
கறுப்புத் தேவதைகள்

அழகால் அங்கீகரிக்கப்படாத
அழுக்குத் தேவதைகள்

காதலிக்கப்படாமல்
தூதுமட்டுமே
போய்க் கொண்டிருக்கும்
துரதிஷ்டத் தேவதைகள்

கல்யாணம் காணாத முதிர்கன்னித் தேவதைகள் என

ஒவ்வொரு தேவதைக்கும் ஒவ்வொரு கதையுண்டு!

கதைகளில் வராத தேவதைகளே
பெரும்பாலும் கவிதைகளில் வருகிறார்கள்!

கவிதைக்குப் பொய் அழகு என்பது மெய்யான உண்மை!!

ஆனால் காதலுக்கு
கண்ணில்லை என்பது சுத்தப்பொய்!

பல காதலில் அழகைக் கண்ணால் அளவெடுத்த பின்னரே
தேவதை என்பவள்
அவதரிக்கப்படுகிறாள்!

கடைசியாய்
சொல்ல வருவது யாதெனில்...

மீண்டும் ஆரம்பத்தின் முதல்வரியை
நினைவில் கொள்க
அவ்வளவே...!

No comments:

Post a Comment